இருநாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்ட பிரதமர் மோடி

1 mins read
efcdcd82-9983-451c-a763-e86ee53ff19c
பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) சவூதி அரேபியா புறப்பட்டுச் சென்றார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சவூதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 2023 செப்டம்பரில் நடந்த ‘ஜி20’ மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார்.

அப்போது சவூதிக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 22) சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி, சவுதி செல்வது இது முதல் முறை.

முன்னதாக, 2016, 2019ல் அந்நாட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

சமூக - கலாசாரம் மற்றும் வர்த்தகத்தில் நீண்ட கால நட்பு நாடுகளான இந்தியாவும் சவுதி அரேபியாவும் அரசியல், வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் ஊடகப் பதிவில் “சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு புறப்பட்டு விட்டேன். அங்கு பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்