ஷென்சென்: உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலுக்கு இடையே சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இன்னும் அணுக்கமாக வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆசிய - பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டுக்குப் பின் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர்.
“இருநாடுகளும் நீண்டகால நட்பையும் நெருக்கமான பங்காளித்துவத்தையும் அனுபவித்துள்ளன. அனைத்துலகச் சூழல் இன்னும் சிக்கலானதாக மாறியுள்ளபோதும் இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது,” என்று பிரதமர் வோங், வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) ஷென்சென்னில் நடைபெற்ற சந்திப்பில் பேசினார்.
துரிதமான அனைத்துலக மாற்றங்களும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் உலகை மறுவடிவமைத்துவரும் வேளையில் உத்திபூர்வ தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதன் வழி சிங்கப்பூரும் சீனாவும் தற்போதைய காலத்தை வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அதிபர் ஸி.
ஒட்டுமொத்த, உயர் ரக, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட பங்காளித்துவத்தைப் புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்லும்படியும் ஒன்று மற்றதன் நவீனமயமாகும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்படியும் திரு ஸி வலியுறுத்தினார்.
“அனைத்துலக, வட்டார ரீதியிலான செழிப்புக்கும் நிலைத்தன்மைக்கும் ஆக்கபூர்வ வகையில் பங்களிக்கலாம்,” என்றார் அவர்.
கைலின் வில்லாவிற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் 50 நிமிடங்களுக்குத் தலைவர்களின் சந்திப்பு நீடித்தது.
2024ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராகப் பதவியேற்ற பின் திரு வோங், திரு ஸியைச் சந்திப்பது இது மூன்றாவது முறை.
வெற்றிகரமாக ஏபெக் மாநாட்டை முன்னெடுத்து நடத்தியதற்காகத் திரு ஸிக்குத் திரு வோங் வாழ்த்துக் கூறினார்.
அனைத்துலகப் புவிசார் பதற்றங்களும் வர்த்தகத் தடைகளும் அதிகரித்துவரும் வேளையில், வட்டாரப் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புத்தாக்கத்தை அரவணைத்து, நிலைத்தன்மையை முன்னிறுத்தி, ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்கான வழிகளை ஆராய 21 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் ஒன்றுகூடினர்.
சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புக் கூட்டத்திற்காகவும் திரு வோங் திரு ஸியை மெச்சினார்.
அத்தகைய கலந்துரையாடல்கள் முக்கியம் என்ற அவர், ஆழமான புரிதல், அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு அது பங்களிப்பதைச் சுட்டினார்.
நவம்பர் 19ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோரைத் திரு ஸி கைலின் வில்லாவில் சந்தித்துப் பேசினார்.
