புத்ராஜெயா: பிரதமர் அலுவலக (கூட்டரசுப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ, கம்போங் பாரு உள்ளிட்ட கூட்டரசுப் பிரதேசங்களில் மலாய் பாரம்பரியக் கிராமப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதிகூறியுள்ளார்.
கோலாலம்பூர், புத்ராஜெயா, லபுவான் ஆகியவற்றில் உள்ள கிராமங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது நகரமயமாதலுக்கு மத்தியில் உள்ளூர் சமூகங்களின் மரபுடைமையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துவதாகத் திருவாட்டி இயோ குறிப்பிட்டார்.
செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியபோது கம்போங் சுங்காய் பெஞ்சாலா உள்ளிட்ட பாரம்பரிய மலாய் கிராமப் பகுதிகளைப் பாதுகாப்பதற்குத் தாம் எடுத்த முயற்சிகளைத் திருவாட்டி இயோ எடுத்துக்காட்டினார்.
“என் கடந்த காலத்தைச் சரிபார்க்கலாம். மலாய் கிராமப் பகுதிகளைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவம் குறித்து நான் அதிகமாகக் குரல் கொடுத்திருக்கிறேன்,” என்றார் அவர்.
வருமானத்திற்குரிய கட்டடங்களை எளிதில் காண முடிகிறது என்ற திருவாட்டி இயோ, பாரம்பரிய மலாய் கிராமப் பகுதிகளைப் பார்ப்பது அரிதாகிவருகிறது என்றும் நாட்டின் மரபுடைமை, அடையாளம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அவை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“மேம்பாட்டுக்கு நான் எதிரானவள் அல்ல. ஆனால் நிலைத்தன்மை அற்ற மேம்பாட்டை நான் எதிர்க்கிறேன். கோலாலம்பூரில் கடும் மழை, நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் ஆகியவை குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திடீரென ஏற்படும் வெள்ளம் கட்டடங்களைப் பேரளவு சேதப்படுத்துகின்றன,” என்ற அவர், 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைச் சுட்டினார்.
திருவாட்டி இயோவைப் பொறுத்தவரை உள்ளூர் சமூகங்களின் அக்கறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். குறிப்பாக மேம்பாட்டுத் திட்டங்கள் சுற்றுச்சூழல் அபாயங்களை ஏற்படுத்துவது குறித்து சமூகங்களுக்குக் கவலை இருக்கலாம்.
நிகழ்ச்சிகளை அதிகம் நடத்துவதற்குப் பதிலாக அடிப்படை நகராட்சிச் சேவைகளை மேம்படுத்துவதில் தமது நிர்வாகம் அதிகம் கவனம் செலுத்தும் என்றார் திருவாட்டி இயோ.

