லியோன்: பிரான்சில் விடுதலைக் கைதியின் பயணப் பெட்டிக்குள் ஒளிந்து சிறைக் கைதி ஒருவர் தப்பிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தச் சம்பவம் தென்கிழக்கு பிரான்ஸ் நகரான லியோனில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நிகழ்ந்ததாக பிஎஃப்எம்டிவி (BFMTV) தொலைக்காட்சி தெரிவித்தது.
அந்த 20 வயது கைதி, பல்வேறு குற்றங்களுக்காக லியோன் அருகில் உள்ள கோர்பாஸ் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
சகக் கைதி ஒருவர் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலை ஆனார். சிறையைவிட்டுச் செல்லும்போது அவர் தமது உடைமைகளை வைத்திருந்த பெரிய பெட்டிக்குள் அந்த இளையர் ஒளிந்துகொண்டார்.
சிறைக்கு வெளியே பெட்டி எடுத்துச் செல்லப்பட்டதும் அவர் அதிலிருந்து வெளியேறி தப்பியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சிறைச் சேவைத் துறை கூறியது.
திட்டமிட்டு நடத்தப்படும் குற்றம் ஒன்றில் தொடர்பு இருந்ததாக அந்தக் கைதியிடம் விசாரணை நடைபெற்று வந்ததாகவும் அது தெரிவித்தது.
இந்நிலையில், கைதி நூதனமாகத் தப்பியது எப்படி என்பது குறித்து சிறை நிர்வாகத்திற்குள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.