கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் இயங்கும் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளதால் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தனியார் விமானங்களைக் கொண்டு மாற்று செயல்பாடுகளை மேற்கொள்வதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
புக்கிட் அம்மான் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குநர் ஓமார் கான் அக்கும்பல்கள் பல வழிகளில் கடத்தல் செய்ய முயன்றபிறகு தற்போது தனியார் விமானங்களைப் பயன்படுத்தியதை கண்டறிந்துள்ளதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) நகரக் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் அண்மையில் பேராக் மாநிலத்தின் ஈப்போ விமான நிலையத்தைப் பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றார் அவர்.
மலேசியரான தனியார் விமானச் சேவை நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் புதன்கிழமை (அக்டோபர் 7) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிவந்துள்ளது. லாவோஸ் நாட்டில் பெரிய அளவிலான போதைப்பொருள்கள் அண்மையில் கடத்தப்பட்டன.
அதன் விசாரணையில் உதவ அந்த 49 வயது மலேசியர் சிலாங்கூரில் உள்ள சுல்தான் அப்துல் அசிஸ் ஷா உள்நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணையில் சுபாங் விமான நிலையத்தில் செயல்படும் தனியார் விமான சேவை நிறுவனம், லாவோசிலிருந்து பிலிப்பீன்சுக்கு போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது என்று காவல்துறை அறிவித்தது.
இவ்வாண்டு ஜூலை மாதம் சேவை தொடங்கிய அந்நிறுவனம் பல வான்வழி சேவைகளை வழங்கியது. அவற்றில் முக்கியப் பிரமுகர்கள், மருத்துவ சேவை நாடும் நோயாளிகள் ஆகியோருடன் சரக்குகளை ஏற்றிச் செல்வதும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
