யங்கூன்: மியன்மாரில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் அந்நாட்டு ராணுவத்திற்குத் தொடர்புடைய ‘யுஎஸ்டிபி’ (USDP) கட்சி வெற்றி பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியன்மாரில் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதில் மிகக்குறைவான மக்களே வாக்களித்திருந்தனர்.
இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜனவரி 5) அன்று வெளியாகிய அதிகாரபூர்வ முடிவுகளின்படி ‘யுஎஸ்டிபி’ கட்சி கீழ்சபையின் ஏறத்தாழ 90 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன, அதன்படி அண்மையில் வந்துள்ள தகவலின்படி ‘யுஎஸ்டிபி‘ கட்சி கீழ்சபைக்கான 102 இடங்களில் 89 இடங்களை வென்றுள்ளது.
நோபெல் பரிசு வென்றவரும் மியன்மார் நாட்டை நாட்டைப் பலல காலம் ஆட்சி செய்தவருமான திருவாட்டி ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆட்சிமுறையை கவிழ்த்து மியன்மாரின் அதிகாரத்தை 2021 ஆம் ஆண்டு ராணுவம் கையிலெடுத்தது என்பது நினைவுக்கூரத்தக்கது.
ஜனவரி 25 நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு தேர்தலின் ஒட்டுமொத்த முடிவுகள் வெளியாகும்.

