நேப்பிடோ: நாட்டின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கும் என்று மியன்மார் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக ஆட்சியைப் பிடித்த மியன்மாரின் ராணுவ அரசாங்கம் வாக்கெடுப்பில் வெற்றிபெறும் என்பது கவனிப்பாளர்கள் பலரின் கருத்து.
மியன்மாரின் சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தலில் அந்நாட்டு ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் கட்சி வென்றது. அதனைத் தொடர்ந்து மியன்மார் ராணுவம், நாடாளுமன்ற மேலவை, கீழவை ஆகியவை மூன்று அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்.
‘சரிபார்ப்பு’ நடவடிக்கைகளுக்குப் (vetting process) பிறகு நாடாளுமன்றம் மூவரில் ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியன்மார் அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மற்ற இரண்டு வேட்பாளர்கள் துணை அதிபர்களாகப் பொறுப்பு வகிப்பர். வேட்பாளர்களைச் ‘சரிபார்க்க’ எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பற்றியோ வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பதைப் பற்றியோ அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
மியன்மார் ராணுவத் தலைவரான மின் ஆவ்ங் ஹ்லாய்ங் அந்நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 30ஆம் தேதிக்கு முன்னால் அவர் ராணுவத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சில கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

