புத்ராஜெயா: மலேசியாவை 2030ஆம் ஆண்டுக்குள் வட்டார செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையமாக மாற்றும் நோக்கில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘மைக்ரோசாப்ட் எலிவேட்’ (Microsoft Elevate) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் ஏறக்குறைய 800,000 மலேசியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அந்த நிறுவனம் வழங்கவுள்ளது.
தேசிய ஏஐ அலுவலகம், தேசிய TVET மன்றத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரிடையே ஏஐ குறித்த விழிப்புணர்வையும் பயன்பாட்டையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே ‘பெர்சாமா மலேசியா’ திட்டத்தின் கீழ் 150,000க்கும் அதிகமானோரை மைக்ரோசாப்ட் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மின்னிலக்கத் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, மலேசியாவை ஒரு ஏஐ நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொரு குடிமகனும் இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றார்.
இந்தத் திட்டம் ஆசிரியர்கள், சிறிய, நடுத்தர வணிகங்கள், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினர் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பொறுப்புடனும், அர்த்தமுள்ள முறையிலும் பயன்படுத்துவதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று மைக்ரோசாப்ட் ஏசியன் பொது மேலாளர் டாக்டர் ஜாஸ்மின் பேகம் தெரிவித்தார்.
இதன் மூலம் மலேசியாவின் மின்னிலக்கப் பொருளியல் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

