உக்ரேனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அதிபர் டிரம்ப்

2 mins read
93dbeb03-4366-44e8-843c-4d88bab704c0
மார்-ஆ-லாகோ (Mar-a-Lago) கடற்கரை உல்லாசத் தலத்தில் சந்தித்துப் பேசிய உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முழுமையான உடன்பாட்டை எட்டச் சில வாரங்கள் எடுக்கும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல் எந்த மாதத்திற்குள் உடன்பாடு தயாராகும் என்பது குறித்து திரு டிரம்ப் தகவல் வெளியிடவில்லை.

இருநாட்டுத் தலைவர்களும் அமெரிக்காவில் உள்ள மார்-ஆ-லாகோ (Mar-a-Lago) கடற்கரை உல்லாசத் தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) சந்தித்துப் பேசினர்.

அதன் பிறகு ஐரோப்பியத் தலைவர்கள் சிலருடன் கைப்பேசிமூலம் இருவரும் உரையாடினர். அமைதி உடன்பாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அவர்கள் விளக்கினர்.

“அமைதி உடன்பாடு குறித்து அனைத்துவிதமான கருத்துகளையும் பகிர்ந்துகொண்டோம். திரு ஸெலென்ஸ்கி 90 விழுக்காடு ஒப்புக்கொண்டார். விரைவில் அனைத்தும் முடிவு செய்யப்படும்,” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

உடன்பாட்டில் சில முக்கியமான அம்சங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அதுதான் சில சிக்கல்களை எழுப்பும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்பாக, டான்பாஸ் பகுதியின் எதிர்காலம் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. தற்போது அந்தப் பகுதியில் உள்ள பாதி நிலப்பரப்பை ர‌ஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

“டான்பாஸ் பகுதி குறித்துப் பேசி வருகிறோம். அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த உக்ரேனிய நாடாளுமன்றத்தில் நான் பேசத் தயார்,” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

“தேவைப்பட்டால் ர‌ஷ்ய அதிபர் புடின், திரு ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் அமெரிக்காவும் இணைந்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார்,” என்று அவர் கூறினார்.

ர‌ஷ்யா 2022ஆம் ஆண்டு உக்ரேன்மீது போர் தொடுத்தது. அதன் பின்னர் இரண்டு நாடுகளிலும் பல உயிரிழப்புகளும் பொருட்சேதமும் ஏற்பட்டன.

ர‌ஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிபராகத் திரு டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து அவர் திரு ஸெலென்ஸ்கியுடன் பலமுறை உரையாடியுள்ளார். அதேபோல் சாடியும் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்