உக்ரேன் பேச்சில் முன்னேற்றம்: அமெரிக்கச் சிறப்புத் தூதர் விட்கோஃப்

1 mins read
9e71b013-4c72-434d-954c-60eba763a04d
அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற்ற அமைதிப் பேச்சு ஆக்ககரமாய் இருந்ததாகக் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஃபுளோரிடா: உக்ரேனில் ர‌‌ஷ்யா தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுகள் ஆக்ககரமாய் அமைந்ததாக அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) கூறியிருக்கிறார். ஃபுளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச் நகரில் அதுகுறித்து நடைபெற்ற பேச்சுகளில் அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரேனிய அதிகாரிகள் பங்கெடுத்தனர்.

கிட்டத்தட்ட நாலாண்டாக நீடிக்கும் உக்ரேனிய-ர‌‌ஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு இரு தரப்பையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நெருக்குகிறார். ர‌‌ஷ்யா, உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளைத் தன்னிடமே வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் அதனை ஏற்க மறுக்கிறது கீவ்.

திரு விட்கோஃபும் திரு டிரம்ப்பின் ஆலோசகர் ஜேரட் கு‌‌ஷ்னரும் ர‌‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரீவைச் சனிக்கிழமை சந்தித்தனர். பின்னர் இருவரும் உக்ரேனிய, ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். பிறகு திரு விட்கோஃபும் திரு கு‌‌ஷ்னரும் உக்ரேனியப் பேராளர்களுடன் தனியாகக் கலந்துபேசினர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சு பயனுள்ளதாய் இருந்ததாகத் திரு விட்கோஃப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். உக்ரேன், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை ஒருமித்த அணுகுமுறையைப் பின்பற்றுவதில் பேச்சு கவனம் செலுத்தியதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்