புத்ராஜெயா: ஊழியர்களின் சம்பளத்தைப் படிப்படியாக உயர்த்தும் அணுகுமுறை எந்த அளவுக்குப் பலன் தருகிறது என்பதைக் கண்டறிய மலேசியா மதிப்பீடு செய்ய இருக்கிறது.
இவ்வாண்டின் இறுதியில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது என்று அந்நாட்டின் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் தெரிவித்துள்ளார்.
இந்த அணுகுமுறை தற்போது நடப்பில் உள்ளது என்றும் இது 2027ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதனால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு இந்த விரிவான மறு ஆய்வு மிக முக்கியமானது என்று அவர் சுட்டினார்.
ஊதிய உயர்வை ஊக்குவிக்கும் சலுகைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், உற்பத்தித்திறன், தொழிற்பயிற்சி, ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது ஆகியவற்றில் இந்த அணுகுமுறை கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஒவ்வொரு நிறுவனத்தின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப இந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்தும் வகையில், முதலாளிகளின் பங்கேற்பு விருப்பத்தின் அடிப்படையிலேயே தொடர வேண்டும் என்றார் அமைச்சர் அக்மல்.
இதற்கிடையே, பணவீக்கம் நிலவியபோதிலும் ஊழியர்களின் உண்மை ஊதியம் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மலேசியப் புள்ளிவிவரத்துறை திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான சம்பள ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டினார்.
அந்த அறிக்கையின்படி, உண்மை ஊதியம் 3.3 விழுக்காடு உயர்ந்து 2,104 ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது.
“ஊதிய உயர்வை வலியுறுத்தினாலும், வாழ்க்கைச் செலவினத்தைச் சீராக நிர்வகிக்காவிட்டால், அந்த ஊதிய உயர்வு குறிப்பிடத்தக்க அல்லது பயனுள்ள தாக்கத்தைத் தராது,” என்று அமைச்சர் அக்மல் கூறினார்.
எனவே, வசிப்பிடம், உணவு, போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் வாழ்க்கைச் செலவினத்தோடு இணைத்தே ஊதிய நிலவரங்களும் மதிப்பிடப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
