ஹனோய்: வியட்னாமின் ஹோ சி மின் சிட்டி, ஹனோய் ஆகிய பகுதிகளில் 46 நகர்ப்புற ரயில் பாதைகள் கட்டப்படவுள்ளன. அதன் மொத்த நீளம் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகும்.
அவை அனைத்தும் 2030ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் கட்டுமான அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹனோயில் 979 கிலோமீட்டர் நீளத்தில் 18 பாதைகளும் ஹோ சி மின் சிட்டியில் 1,024 கிலோமீட்டர் நீளத்தில் 28 பாதைகளும் அமைக்கப்படும்.
ஹனோயின் 18 திட்டங்களில் 11 திட்டங்களுக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. அவற்றில் எட்டுத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், மூன்று திட்டங்கள் ஆயத்தக் கட்டத்தில் உள்ளன.
நோன் பகுதியிலிருந்து ஹனோய் ரயில் நிலையம் வரையிலான பாதை எண் 3.1, நம் தாங் லாங் நகர்ப்புற பகுதியிலிருந்து திரான் ஹங் தாவோ சாலை வரையிலான பாதை எண் 2.1, வான் காவோ சாலையிலிருந்து ஹோவா லாக் வரையிலான பாதை எண் 5 ஆகியவை கட்டுமானத்தில் உள்ள முக்கியப் பாதைகளில் அடங்கும்.
மேலும், ஜூனில் தொடங்கப்பட்ட ஐந்து புதிய பிரிவுகளின் கட்டுமானப் பணிகள் 2030க்குள் நிறைவடையும்.
ஹோவா லாக் முதல் துவாங் ஸா வரையிலான பாதை எண் 8, தாங் லாங் பாலம் முதல் ஓஷன் பார்க் நகர்ப்புற பகுதி வரையிலான பாதை எண் 14, கோ லோவா, டைம்ஸ் சிட்டியை இணைக்கும் வட்டப் பாதை எண் 10 ஆகியவை அதில் அடங்கும்.
ஹனோய் ரயில் நிலையத்திலிருந்து ஹோவாங் மை வரையிலான பாதை எண் 3.2, நோன் பகுதியிலிருந்து சோன் தாய்டவுன் வரையிலான பாதை எண் 3.3ன் நீட்டிப்புப் பணிகள், சுவான் மாய் வரையிலான பாதை 2ஏ நீட்டிப்பு ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
ஹோசிமின் சிட்டியில் அமையவுள்ள 28 பாதைகளில் எட்டுப் பாதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 2030க்குள் முடிக்கப்படும்.
பென் தாங் சந்தையைத் தாம் லூவாங், தூ தீம் பகுதிகளுடன் இணைக்கும் பாதை எண் 2ன் இரண்டு பிரிவுகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
எஞ்சிய ஆறு பாதைகளுக்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. அத்திட்டங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க வியட்னாமின் கட்டுமான அமைச்சு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
