புத்ராஜெயா: மலேசியாவின் சொத்துப் பரிவர்த்தனைகள் 2025ஆம் ஆண்டில் 240 பில்லியன் மலேசிய ரிங்கிட்டை எட்டியுள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த அளவாகும் என்று அந்நாட்டின் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) அறிவித்தார்.
இத்துறை முழுமையாக மீண்டுள்ளதாகவும் பொருளியலின் முக்கியத் தூணாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 2023ஆம் ஆண்டில் 180 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு தற்போது கணிசமான அளவில் உயர்ந்திருப்பது நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் இத்துறையின் முக்கிய பங்கை உறுதிப்படுத்துகிறது என்றார் திரு ஙா.
“மலேசிய நிலச்சொத்துத் துறை முழுமையாக மீண்டு வந்தது மட்டுமல்லாமல், தற்போது தேசியப் பொருளியல் வளர்ச்சிக்கு உந்துதலைத் தரும் ஓர் இயந்திரமாகவும் உருவெடுத்துள்ளது.”
2023ஆம் ஆண்டில் மொத்த பரிவர்த்தனைகள் 180 பில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்தியக் கிழக்கில் போர் காரணமாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியிலும், சொத்துத் துறையைப் பாதிக்கும் வர்த்தக நடவடிக்கைகளைத் தாக்குப் பிடிக்கச் செய்ய அமைச்சு பணியாற்றி வருவதாக ஙா தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையை ஈரானிய ராணுவம் முற்றுகையிட முயற்சி செய்வதாகக் கூறப்படும் தகவல்களை மலேசியா கூர்ந்து கவனித்து வருவதாக அவர் கூறினார்.
“உலகின் 25 விழுக்காடு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரானிய ராணுவம் முற்றுகையிட முயல்வதைக் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே, போக்குவரத்துச் செலவுகள் நாட்டின் வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறைகளை மோசமாகப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

