புதிய 250 அமெரிக்க டாலரில் டிரம்ப்பின் முகம் இடம்பெறப் பரிந்துரை

அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு விழா

புதிய 250 அமெரிக்க டாலரில் டிரம்ப்பின் முகம் இடம்பெறப் பரிந்துரை

1 mins read
cc3f9c3c-0308-4109-b96e-4cf248c835b6
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முகம் பொறிக்கப்பட்ட புதிய 250 டாலர் நோட்டை வெளியிடுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: அமெரிக்கா உருவானதன் 250ஆம் ஆண்டு விழாவையொட்டி, அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முகம் இடம்பெறும் புதிய 250 டாலர் நோட்டை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

இதற்கான மாதிரி வடிவங்களைத் தயாரிக்குமாறு அமெரிக்கப் பண அச்சகப் பிரிவிற்கு கருவூலத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

150 ஆண்டுகால அமெரிக்கச் சட்டம் மாறுமா?

இருப்பினும், அமெரிக்கக் கூட்டாட்சி சட்டத்தின்படி, உயிருடன் இருக்கும் நபர்களின் புகைப்படங்களை அந்நாட்டின் காகிதப் பணத்தில் அச்சடிக்க முடியாது.

1866ஆம் ஆண்டுமுதல் இந்தத் தடை அமலில் உள்ளதால், அதிபர் டிரம்ப்பின் படத்தை நோட்டில் அச்சிட அச்சக அதிகாரிகள் தரப்பில் சட்ட ரீதியான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பிரிட்டிஷ் கலைஞர் இயன் அலெக்சாண்டர் வடிவமைத்துள்ள மாதிரி நோட்டில் அதிபர் டிரம்ப்பின் முகமும், 250ஆம் ஆண்டு விழாவின் முத்திரையும் இடம்பெற்றுள்ளன. 

இந்த 250 டாலரை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டுமானால், அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய சட்டம் இயற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். 

ஒரு புதிய நோட்டை வடிவமைத்து வெளியிடக் குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதே வேளையில், தற்போதைய $100 நோட்டுகளில் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்தைப் பொறித்து அச்சடிக்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஅமெரிக்க டாலர்டாலர்டோனல்ட் டிரம்ப்