முந்தைய எல்லைப் பாதுகாப்புக் கட்டமைப்பை மீண்டும் அமல்படுத்த முன்மொழிவு

முந்தைய எல்லைப் பாதுகாப்புக் கட்டமைப்பை மீண்டும் அமல்படுத்த முன்மொழிவு

2 mins read
93வது மலேசிய ஆயுதப் படை தினத்தை முன்னிட்டு மலேசியத் தற்காப்புப் படைத் தலைவருடன் நடைபெற்ற சிறப்பு ஊடக நேர்காணல்
eed757ff-9229-4cc9-993b-24a8c2b957a5
தேசிய எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, முன்னாள் தேசியப் பணிக்குழுவின்கீழ் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மலேசிய ஆயுதப் படை, தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாகத் தற்காப்புப் படைத் தலைவர் ஜெனரல் மாலிக் ரசாக் சுலைமான் தெரிவித்துள்ளார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: தேசிய எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, முன்னாள் தேசியப் பணிக்குழுவின்கீழ் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மலேசிய ஆயுதப் படை, தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

தற்காப்புப் படைத் தலைவர் ஜெனரல் மாலிக் ரசாக் சுலைமான் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தேசியச் செயல்பாட்டு மேலாண்மைக் குழுவின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முன்மொழிவு, மலேசிய அரசுக் காவல்துறை, மலேசியக் கடல்சார் அமலாக்க அமைப்பு, மலேசிய சுங்கத் துறை, மலேசியக் குடிநுழைவுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைக்கும் என்று அவர் கூறினார்.

நாட்டின் நில, கடல் எல்லைகளில் பாதுகாப்பு பலவீனங்களைச் சமாளிப்பதில், அமலாக்க அமைப்புகளின் உத்திபூர்வ ஒருங்கிணைப்பு அதிகம் பயன்தரக்கூடியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், தேசியப் பணிக்குழு மூலம் நாங்கள் முன்பு இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையைச் செயல்படுத்தினோம். குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அந்த நடைமுறை மாற்றப்பட்டது. அதற்கு முன்பு, பல்வேறு அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் அது பயனுள்ளதாக இருந்தது என நிரூபிக்கப்பட்டது.

“எனவே, தற்போதைய பாதுகாப்புச் சவால்களையும் பலவீனங்களையும் எதிர்கொள்ள, பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அந்த அணுகுமுறையின் அம்சங்கள் மீண்டும் அமல்படுத்தப்படவேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

93வது மலேசிய ஆயுதப் படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஊடக நேர்காணலின்போது அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

மலேசிய ஆயுதப் படை தேசிய எல்லைப் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக ஜெனரல் மாலிக் ரசாக் கூறினார். அத்துமீறி உள்ளே வருபவர்களை அது தொடர்ந்து கைது செய்து வருகிறது என்றும் அனைத்துச் சம்பவங்களும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் அவர் சொன்னார்.

“வேவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் எல்லைதாண்டிய பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாள தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற அண்டைநாடுகளுடன் மலேசியா அணுக்கமான ஒத்துழைப்பைக் கட்டிக்காத்துவருகிறது,” என்றும் ஜெனரல் மாலிக் ரசாக் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஎல்லைதற்காப்பு