வரலாறு காணாத அளவில் கையிருப்பு எண்ணெய்யை வழங்குமாறு பரிந்துரை: தகவல்

வரலாறு காணாத அளவில் கையிருப்பு எண்ணெய்யை வழங்குமாறு பரிந்துரை: தகவல்

படம்: ஏஎஃப்பி

11 Mar 2026 - 5:50 pm

2 mins read

பாரிஸ்: அனைத்துலக எரிசக்தி அமைப்பு (ஐஇஏ) தங்களின் உத்திபூர்வ கையிருப்பு எண்ணெய்யிலிருந்து வரலாறு காணாத அளவு எண்ணெய்யை சந்தையில் விநியோகிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான சண்டை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக வால் ஸ்திரீட் ஜர்னல் ஊடகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தெரிவித்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரேன் மீது ர‌ஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து ஐஇஏ உறுப்பு நாடுகள் மொத்தம் 182 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை இருமுறை விநியோகித்தது. இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையின்படி வழங்கப்படக்கூடிய எண்ணெய்யின் அளவு அதையும் விஞ்சிவிடும்.

வழக்கத்துக்கு மாறாக ஐஇஏ செவ்வாய்க்கிழமை உறுப்பு நாடுகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. பரிந்துரையைப் பின்பற்றுவதா என்பதற்கான முடிவு புதன்கிழமை (மார்ச் 11) எடுக்கப்படும் என்று வால் ஸ்திரீட் ஜர்னல் குறிப்பிட்டது.

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தால் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஒரு நாடு மறுப்பு தெரிவித்தால்கூட இந்த நடைமுறையில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கையிருப்பு எண்ணெய்யை வழங்கலாம் என்ற முடிவை எடுக்கும் நிலைக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமையன்று சென்றனர். தாங்கள் முடிவெடுப்பதற்குப் பதிலாக நிலைமையை ஆராயுமாறு ஜி7 நாடுகளுக்கான எரிசக்தி அமைச்சர்கள், ஐஇஏயைக் கேட்டுக்கொண்டனர்.

“தற்போது எந்த நாட்டிலும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாவிட்டாலும், விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கின்றன. அதனால், நிலைமையைக் கவனிக்காமல் விட முடியாது,” என்று ஜி7 நாடுகளைச் சேர்ந்த ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“ஐஇஏ தலைமையில் கையிருப்பு எண்ணெய்யை வழங்குவதற்கு ஜி7 நாடுகள் பெரும்பாலும் ஆதரவாக இருந்து வருகின்றன,” என்று தமது பெயர்கூற விரும்பாத அந்த நபர் கூறினார்.

எனினும், “கையிருப்பு எண்ணெய்யை உடனடியாக வழங்க முடியாது. மொத்த அளவு, எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு எண்ணெய் வழங்கவேண்டும், எப்போது வழங்கவேண்டும் போன்ற முடிவுகளை எடுக்கவேண்டியதே அதற்குக் காரணம்,” என்று அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்எண்ணெய்கச்சா எண்ணெய்ஈரான்அமெரிக்காஇஸ்‌ரேல்