பெட்டாலிங் ஜெயா: இசை நிகழ்ச்சி வருகையாளர்களின் சிறுநீரைப் பரிசோதிக்க மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கம் பரிந்துரைத்தது.
அம்மாநிலத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் உட்கொள்ளப்படுவதைத் தவிர்க்க அந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
வருகையாளர்களின் சிறுநீரைப் பரிசோதிப்பது நடைமுறைக்கு உகந்ததன்று என இசை நிகழ்ச்சி ஏற்பாட்டார்களும் வருகையாளர்களும் கூறியுள்ளனர்.
குறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானோரின் சிறுநீரைப் பரிசோதிப்பது சாத்தியமன்று; அதனால் அவ்வாறு செய்ய இயலாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பலரில் ஒருவரான இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் ஷிராஸ் புரோஜெக்ட்ஸ் (Shiraz Projects) நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஷிராஸ்டீன் அப்துல் கரீம் சொன்னார். குறிப்பிட்ட தீர்வுகளின் மூலம் போதைப்பொருள் பிரச்சினையைக் கையாளுமாறு அவர் பரிந்துரைத்தார்.
அதேபோல், இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ரசிகரான கேத்தரீன் வோங், சிறுநீர்ப் பரிசோதனை மேற்கொள்ள அதிக நேரம் எடுக்கும் என்றும் அந்நடவடிக்கை பலரை இசை நிகழ்ச்சிகளுக்குப் போகாமல் இருக்கச் செய்யும் என்றும் கருத்துரைத்தார். அதோடு, மனிதவளம், கருவிகள் ஆகியவற்றில் கூடுதல் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்பதால் ஏற்பாட்டாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

