சோல்: ராணுவ ஆட்சியை திடுதிடுப்பென்று அறிவித்ததன் தொடர்பில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான விசாரணையை அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கி உள்ளனர்.
ராணுவ ஆட்சியைப் புகுத்தியதில் அதிபர் யூனின் உள்துறை அமைச்சர், முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஆகியோரின் பங்கு குறித்து வழக்கறிஞர்கள் விசாரணை நடத்துவார்கள் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (டிசம்பர் 5) தெரிவித்தது.
தென்கொரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) ராணுவ ஆட்சியை அறிவித்ததில் அப்போதை தற்காப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியுனுக்குத் தொடர்பு இருந்ததாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதால் அவர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் யோன்ஹாப் கூறியது.
இருப்பினும், அதிபருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அந்தத் தடை இல்லை.
அரசாங்க எதிர்ப்பாளர்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் எழுந்ததாகவும் அரசியல் எதிரிகளால் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் ராணுவ ஆட்சி தேவைப்படுவதாகக் கூறி திரு யூன் அதனை அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு ஆறு மணி நேரமே நீடித்தது.
ராணுவ ஆட்சி அறிவிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப்பட்டதால் அந்த அறிவிப்பு உடனடியாக ரத்து ஆனது.
அதேநேரம், கட்சியிலிருந்து விலகுமாறு அதிபர் ஹூனை தாம் கேட்டுக்கொண்டதாக தென்கொரிய ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் வியாழக்கிழமை (டிசம்பர் 5) கூறினார்.
“கட்சியிலிருந்து விலகும் அறிவிப்பு அடங்கிய விலகல் கடிதத்தை அதிபரிடம் கேட்டுள்ளேன். அரசியலமைப்புக்கு எதிராக ராணுவச் சட்டத்தை அறிவித்த அதிபரை கட்சி தற்காக்கவில்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆயினும், அதிபர் யூனுக்கு எதிராக பதவிநீக்க மசோதாவைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தோற்கடிக்க தமது கட்சியின் எம்பிக்கள் அனைவரும் ஒன்று திரள்வார்கள் என்று நாடாளுமன்ற ஆளும் கட்சித் தலைவர் சூ கியுங்-ஹோ கூறினார்.
ஆளும் மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த 108 எம்பிக்களும் ஓரணியில் நிற்பார்கள் என்று கட்சியினரிடம் நேரலையாக உரையாடியபோது அவர் குறிப்பிட்டார்.
மசோதா மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை (டிசம்பர் 7) நடைபெறுகிறது. அந்த மசோதா வெற்றிபெற ஆளும் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்பிக்களின் ஆதரவு எதிர்க்கட்சியினருக்குத் தேவைப்படுகிறது.

