தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 10 ஆண்டு சிறைவிதிக்க அரசுத்தரப்பு கோரிக்கை

2 mins read
bcb53d93-5c08-4538-96fb-aa29a58b7d77
பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்றதன் தொடர்பிலான குற்றங்களுக்காக அந்நாட்டின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்குப் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்க அரசுத்தரப்பு கோரியுள்ளது.

நீதி விசாரணைக்குத் தடையாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவருக்கு அந்தத் தண்டனை பொருத்தமாக இருக்கும் என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) சோல் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜனவரி மாதம் நீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024 டிசம்பர் 3ஆம் தேதி, அப்போது அதிபராக இருந்த யூன், திடீரென்று மக்களாட்சிக்கு முடிவுகட்டும் விதமாக ராணுவ ஆட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அது தென்கொரியாவில் பெரும் கண்டனத்துக்கு ஆளானதுடன் நாடாளுமன்றத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.

எதிர்ப்பைச் சமாளிக்க இயலாமல் ஒருசில மணி நேரங்களிலேயே அவர் தமது அறிவிப்பை மீட்டுக்கொண்டார்.

இருப்பினும், அரசியலமைப்புச் சட்டப்படி, ராணுவச் சட்ட அறிவிப்பு தொடர்பிலான நடவடிக்கைகளுக்காக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் பதவியில் இருந்து யூன் அகற்றப்பட்டார்.

அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சீன ஆதரவு, வடகொரிய ஆதரவு, நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடவே தாம் ராணுவச் சட்ட அறிவிப்பை வெளியிட்டதாக யூன் தமது செயலைத் தற்காத்துப் பேசியிருந்தார்.

யூன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் கிளர்ச்சியை வழிநடத்திய குற்றச்சாட்டும் அடங்கும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மரண தண்டனையை எதிர்நோக்குவார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்