சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்குப் பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் வாதிட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்றது, நீதிக்குத் தடையாக இருந்தது, கைதாவதைத் தவிர்க்க முற்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளைத் திரு யூன் எதிர்கொள்கிறார்.
சோல் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி வழக்கு விசாரணையில், திரு சோ இயுன்-சுக் வழிநடத்திய சிறப்பு ஆலோசனைக் குழு தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல இப்போதும் அதே தண்டனையை முன்வைத்தது.
“திரு யூனின் குற்றம் கடுமையானது. அதிபர் பதவியைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்ட ஒழுங்கை அவர் குலைக்க முயன்றதுடன் அரசாங்க அதிகாரத்தைச் சுய லாபத்துக்குப் பயன்படுத்த முற்பட்டார்,” என்று சிறப்புக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் கடமை இருந்தபோதும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் திரு யூன், விசாரணையில் ஒத்துழைக்காமலும் செய்தத் தவற்றுக்கு வருந்தாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரியில் சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் திரு யூனுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையை விதித்தது.
அவர்மீது சுமத்தப்பட்ட ஐந்தில் நான்கில் குற்றச்சாட்டுகளில் திரு யூன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிக்குத் தடையாக இருந்தது, ராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை ஒருசில அமைச்சரவை உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடியது, அப்போதைய பிரதமர் ஹன் டக் சூ, தற்காப்பு அமைச்சர் கிம் யொங் ஹியுன் ஆகியோர் கையெழுத்திட்ட ராணுவச் சட்டப் பிரகடனத்தைச் சட்டபூர்வமாக அமல்படுத்த முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் திரு யூன்மீது சுமத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆவணம் பிறகு ரத்து செய்யப்பட்டது.
மேல்முறையீட்டுத் தீர்ப்புக்கான நாள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. எனினும் இவ்வாண்டின் முற்பாதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

