லிஸ்பன்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் காவல்துறையின் வன்முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது.
சில நாள்களுக்கு முன்னர் போர்ச்சுகல் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆபிரிக்க குடியேறியான ஓடைர் மோனிசை சுட்டுக்கொன்றார். அது அந்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 21ஆம் தேதி 43வயது ஓடைர் மோனிஸ், அம்டோராவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஒரு ஹோட்டலில் சமையல்காரராக பணியாற்றி வந்தார்.
காவல்துறையை கண்டித்து சனிக்கிழமை போர்ச்சுகலில் உள்ள பல இன மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். ‘ஓடைருக்கு நீதி வேண்டும்’, எங்களை கொல்லாதீர்கள்’ என்ற வாசகங்களை பதாகைகளில் ஏந்தியபடி மக்கள் போராட்டம் நடத்தினர்.
காவல்துறையினர் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் ஆனால் இங்கு மாறாக காவல்துறையினரைக் கண்டால் அஞ்ச வேண்டியுள்ளது என்று போராட்டம் நடத்தியவர்கள் குறைகூறினர்.
மேலும் காவல்துறை இல்லாத இடங்களே தற்போது அமைதியாக உள்ளது, இது மோசமான சூழலை எடுத்துக்காட்டுகிறது என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.