லண்டன்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ (Palestine Action) அமைப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதைக் கண்டிக்கும் வகையில் சனிக்கிழமை (அக்டோபர் 4) மாலை லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில நாள்களுக்கு முன்னர் மான்செஸ்டர் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடந்தது. அதில் இருவர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இவ்வார இறுதியில் லண்டனில் ஆர்ப்பாட்டம் ஏதும் நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தும் சனிக்கிழமை, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடப்பதற்கு முன்னரே ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவிட்டதாகப் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தைக் கைவிடும்படி பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சனிக்கிழமை காலை, தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
“ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டவர்கள் பிரிட்டனின் யூதர்கள் குறித்து யோசிக்க வேண்டும். வழிபாட்டுத் தலத்தில் நடந்த தாக்குதலுக்கு வருத்தப்பட வேண்டும்.
“இந்த நேரத்தில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்று திரு ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய லண்டன் வட்டாரத்தில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவு தரும் வகையில் கையில் தட்டிகளை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 442 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்ற ஆர்ப்பாட்டம் செப்டம்பர் மாதமும் நடந்தது. அதிலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கைது செய்யும்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதட்டிக் கூச்சலிட்டனர். மேலும் கோஷங்களையும் எழுப்பினர்.
“காவல்துறையினரின் நடவடிக்கை ஏமாற்றம் தருகிறது. அமைதியாகப் பேரணி நடத்துபவர்களைக் கைது செய்வது சரியில்லை,” என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.