மினியாபோலிஸ்: அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை (பிப்ரவரி 7) அரசாங்க கட்டடத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் கூடியிருந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் கூடியிருந்த பி.ஹெச். விப்பல் அரசாங்க கட்டடத்தில் குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள் இருப்பார்கள். பொதுவாக அங்குதான் சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்வது குறித்து அதிகாரிகள் திட்டமிடுவர்.
அதேபோல் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து போராட்டக்காரர்கள் கூடும் இடமாகவும் அக்கட்டடம் விளங்குகிறது.
“போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் சிலர் பனிக்கட்டிகளை எடுத்து அதிகாரிகள்மீது வீசினர். இதில் ஒருவர் காயமடைந்தார். ஒரு கார் சேதமடைந்தது,” என்று ஹெனிபின் காவல்துறை தெரிவித்தது.
“கூட்டம் கலைய வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்படும், அதை மதித்து உடனடியாக மக்கள் வெளியேற வேண்டும். அதை மீறுபவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் மாநில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின் போது ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

