டெஹ்ரான்: டெஹ்ரானின் எதிரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிரிகளாக நடத்தப்படுவார்கள் என்று அந்நாட்டின் முன்னணிக் காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்குப் போரால், பேரளவிலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
“யாராவது எதிரியின் விருப்பங்களுடன் முன்வந்தால், அவரை வெறும் ஆர்ப்பாட்டக்காரராகப் பார்க்கமாட்டோம்; எதிரியாகப் பார்ப்போம்,” என்று தேசியக் காவல்துறைத் தலைவர் அகமது ரெஸா ரடான் கூறினார்.
“எதிரிகளுக்கு எதிராகச் செய்யும் அனைத்தையும் அவர்களுக்கும் செய்வோம். எதிரிகளை நடத்தும் அதே விதத்தில் அவர்களையும் நடத்துவோம்,” என்றார் அவர்.
கடந்த ஜனவரி மாதத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, அவரது எச்சரிக்கை வந்துள்ளது.
தடைகள் விதிக்கப்பட்டுள்ள நாட்டில் பொருளாதாரக் குறைபாடுகளின் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
அதிகாரிகள் அந்த ஆர்ப்பாட்டங்களைக் கலவரங்கள் என்று கூறியுள்ளனர். முன்னதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் சரணடையவேண்டும் இல்லாவிடில் தண்டிக்கப்படுவார்கள் என்று திரு ரடான் கூறியிருந்தார்.
அந்தக் கலவரத்தில் பாதுகாப்புப் படையினர், வழிப்போக்கர்கள் உட்பட 3,000க்கும் அதிகமானோர் மாண்டதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஈரானிய எதிரிகளால் தூண்டப்பட்ட வன்செயல் அது என்று அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அந்த ஆர்ப்பாட்டத்தில் 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவில் தளம் கொண்டுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி அமைப்பு கூறியது.
இதுவரை, 50,000க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

