நேப்பாளத்தில் டிக்டாக் தடைக்குக் கண்டனம்

1 mins read
ccaa3f97-4c1e-4789-8eac-2b752ae70549
நேப்பாள அரசாங்கம் டிக்டாக் செயலிக்குத் தடை விதித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: சமூக நல்லிணக்கமும் நல்லெண்ணமும் பாதிக்கப்பட்டதால், சென்ற வாரம் பிரபல டிக்டாக் தளத்தை நேப்பாளம் தடை செய்தபோது, அந்நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பயனாளர் மஞ்சிதா மனந்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

“முடிவு திடீரென வந்ததால் நான் அதிர்ச்சியடைந்தேன்,” என்று திருவாட்டி மனந்தார் கூறினார்.

உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றைப் பற்றி தகவல்களைச் சேகரித்து டிக்டாக்கில் அவர் வெளியிடுவதால் மாதம் கிட்டத்தட்ட 1,500 அமெரிக்க டாலர் சம்பாதித்து வந்தார்.

டிக்டாக் தடைக்குப் பிறகு தமக்கு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற மற்ற சமூகத் தளங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இழப்பை ஈடுகட்ட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

சீனாவில் தளம்கொண்டுள்ள ‘பைட்டான்ஸ்’ நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலியைத் தடை செய்திருக்கும் நாடுகளின் பட்டியலில் நேப்பாளமும் சேர்ந்துள்ளது.

டிக்டாக், தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இடையூறாக இருக்கக்கூடும் என்று கூறி, அண்டை நாடான இந்தியா 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதற்குத் தடை விதித்தது.

இந்நிலையில் நேப்பாளத்தைச் சேர்ந்த பலர், டிக்டாக் தடை தங்களது வருமானத்தைப் பாதித்துள்ளதாகவும் வெளிப்படையாக கருத்து கூறுவதற்கான ஒரு தளத்தை மூடியுள்ளதாகவும் கூறினர்.

அரசாங்கம் தடையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரி தலைநகர் காத்மாண்டுவில் பலர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் தடைக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்