டாக்கா: முன்னாள் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா வரும் டிசம்பர் மாதம் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதை முன்னிட்டு நடந்த ஆர்ப்பாட்டங்களையொட்டி அந்நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
வன்முறையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் பங்ளாதேஷின் முன்னாள் இடைக்காலத் தலைவர் முகம்மது யுனுசின் வம்சாவளி வீட்டுக்குத் தீமூட்டப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
ஹசினா நாடு திரும்பத் திட்டம்
நாடு திரும்புவதற்காக புதிய கடப்பிதழுக்கும் அடையாள அட்டைக்கும் விண்ணப்பிக்க திருவாட்டி ஹசினா வேண்டுகோள் விடுந்திருந்தார். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடந்தன. அதையடுத்து அவரின் அவாமி லீக் கட்சி வியாழக்கிழமை (நவம்பர் 19) நாடு முழுவதும் முடக்கநிலையைச் செயல்படுத்தவேண்டும் எனக் குரல் கொடுத்தது.
வன்முறையைக் கட்டுப்படுத்த பங்ளாதேஷ் எல்லைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 97 குழுக்கள் பங்ளாதேஷின் ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளனர். கோப்பல்காஞ், ஃபாரிட்பூர் ஆகிய பகுதிகள் அவற்றில் அடங்கும். அப்பகுதிகளில் திருவாட்டி ஹசினாவின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது என்று பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
யுனுஸ் வீட்டுக்குத் தீவைப்பு
தலைநகர் டாக்காவுக்கு வடகிழக்கே கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, முன்னாள் பங்ளாதேஷ் இடைக்காலத் தலைவர் யுனுசின் வம்சாவளி வீட்டுக்கு புதன்கிழமை (நவம்பர் 18) தீமூட்டப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. தீப்பற்றக்கூடிய பொருள்கள் அவ்வீட்டின் முதல் தள அறைக்குள் எறியப்பட்டிருக்கக்கூடும் என்று அப்பகுதி காவல்துறைத் தலைவர் மொஸாமல் ஹாக், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். அந்த அறை பயன்படுத்தப்படாமல் இருந்தது. வீட்டின் மேல் தளங்களில் வசித்த, திரு யுனுசின் தந்தைவழி உறவினர்கள் பாதுகாப்பாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாட்டி ஹசினாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு திரு யுனுசின் அரசாங்கமும் அட்சி புரிந்தது. அதைத் தொடர்ந்து திருவாட்டி ஹசினாவின் ஆதரவாளர்கள் திரு யுனுசின் ஆட்சிக்கு எதிராக வெறுப்பைத் தெரிவித்துவந்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு மாணவர்கள் வழிநடத்திய போராட்டத்தை மோசமான முறையில் அடக்கியதற்காக திருவாட்டி ஹசினாவுக்குச் சென்ற ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 17ஆம் தேதி அந்தத் தீர்ப்பு விதித்து ஓராண்டு நிறைவடைந்தது.
