தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்.பி.க்களுக்கான சலுகைகளை ரத்து செய்ய இந்தோனீசிய அதிபர் முடிவு

2 mins read
d15c86c7-b501-41ef-bb8b-01cc2beeba41
பாலியின் டென்பசாரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. - படம: இபிஏ

ஜகார்த்தா: மோசமடைந்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பல சலுகைகளை தாம் ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் அதற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்குவதாகவும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இன்று (ஆகஸ்ட் 31) மாலை அறிவித்தார்.

அத்துடன், தவறிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்ட கூடுதல் சம்பளம் உள்ளிட்ட புதிய சலுகைகளுக்கு எதிராகத்தான் இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கின.

இந்நிலையில், தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் பரவியதால் அதிபர் பிரபோவோ சீனாவுக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது.

ஜப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் செப்டம்பர் 3ஆம் தேதி சீனாவில் ‘வெற்றி நாள்’ அணிவகுப்பு நடைபெறுகிறது. அதில் பிரபோவோ சுபியாந்தோ கலந்துகொள்வதாக இருந்தது.

ஆனால் ஜகார்த்தாவில் இவ்வாரம் வெடித்த ஆர்ப்பாட்டம், ஓராண்டுகாலமே ஆன பிரபோவோவின் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய முதல் சோதனையாக அமைந்துள்ளது.

“அதிபர் தற்போதைய நிலைமையை நேரடியாகத் தொடர்ந்து கண்காணிக்க விரும்புகிறார். இதற்கு சிறந்த வகையில் தீர்வுகாண முயற்சி செய்கிறார்,” என்று அதிபரின் பேச்சாளர் பிரசெட்யோ ஹாடி ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட காணொளி அறிக்கையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் தொடர்பில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பின்னர் மோசமடைந்தது.

நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே நடந்த வன்முறை மோதலின்போது பொருள் விநியோகிக்கும் ஊழியர்மீது காவல்துறை வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் மேலும் மோசமடைந்தது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் போன்றோரின் வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடத் தொடங்கினர்.

இன்று (ஆகஸ்ட் 31) அதிகாலை பின்டோரா மாவட்டத்தில் உள்ள நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்த்ராவதியின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் அங்கிருந்த மின்னணு சாதனங்கள் முதல் ஆடை மற்றும் மேசை, நாற்காலிகள் வரை மதிப்புமிக்க பொருள்களை தூக்கிச் சென்றதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.

ஆசிரியர்கள் நாட்டின் சுமை என்று திருவாட்டி இந்த்ராவதி பேசியதாக போலியாகப் புனையப்பட்ட காணொளியை உண்மை என்று நம்பிய ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரம் அதிகமானதாக செய்திகள் கூறின.

இந்நிலையில் ஜகார்த்தா இவ்வாரம், மெட்டா மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களின் பிரதிநிதிகளை அழைத்து, தவறான தகவல்கள் இணையத்தில் பரவியுள்ளதால் உள்ளடக்கங்களை ஆராய்ந்து கட்டுப்படுத்துமாறு தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு இந்தோனீசியாவின் மக்காசார் நகரின் நகர மன்றக் கட்டடத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர். அதில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர்.

தீப்பற்றி எரிந்த கட்டடத்தில் அவர்கள் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்ததாக நகர மன்றச் செயலாளர் ரஹ்மத் மப்பதோபா தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர மன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்