‘புரோட்டோன் சாகா’ கார்கள் எகிப்தில் தயாரிக்கப்படும்

1 mins read
8c82b98f-153c-4725-b398-f98a0f04bbef
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப் படம்: பெர்னாமா

கெய்ரோ: மலேசியாவின் ‘புரோட்டோன்’ (Proton) வாகன நிறுவனத்தின் ‘புரோட்டோன் சாகா’ வகை கார் வரும் டிசம்பர் மாதம் முதல் எகிப்தில் தயாரிக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 12) தெரிவித்தார்.

அதன்படி, எகிப்தில் புரோட்டோன் சாகா கார்களின் பாகங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும். இருநாட்டு ஒத்துழைப்பில் புதிய அணுகுமுறையைப் பின்பற்றி வளர்க்கும் நடவடிக்கைகளின் அங்கமாக இம்முயற்சி எடுக்கப்படுகிறது என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

“புரோட்டோன் வாகன நிறுவனம் மட்டுமல்ல. அது மலேசிய அடையாளத்தின் ஓர் அங்கம், மலேசியாவின் பெருமை,” என்று திரு அன்வார் எகிப்தில் அமையும் புரோட்டோன் ஆலையின் தொடக்க நிகழ்ச்சியில் கூறினார். உள்ளூர் தொழில்துறைகளை மேம்படுத்த இத்தகைய கூட்டு முயற்சிகள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நம்பிக்கை, நட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியா, எகிப்தில் செயல்படுகிறது,” என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.

எகிப்து ஆலையில் 2024லிருந்து 2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 16,000 புரோட்டோன் சாகா கார்களைத் தயாரிப்பது இலக்காகும். அந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் 570 மில்லியன் ரிங்கிட் (172 மில்லியன் வெள்ளி).

எகிப்தில் அமையும் புதிய புரோட்டோன் ஆலை, கிஸா நகரில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்