பிரசல்ஸ்: உக்ரேனுக்கு உதவ வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) ஐரோப்பிய ஒன்றியம் S$136 பில்லியன் ( €90 billion) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் முடக்கிவைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துகளை அந்தக் கடனுக்கு பயன்படுத்த ஒன்றியம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் நள்ளிரவு நடந்த உச்சநிலை சந்திப்புக் கூட்டத்துக்குப் பிறகு ஐரோப்பியத் தலைவர்களால் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரேன், ரஷ்யப் போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த கடனுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதல் கிடைத்துள்ளது.
“உக்ரேன் நாட்டையும் மக்களையும் தற்காக்கத் தேவையான ஆதரவு வழங்க இன்றைய முடிவு உதவும்,” என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அன்டோனியோ கொஸ்டா கூறினார்.
“ரஷ்யாவின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்படுவதும், உக்ரேனுக்கு வரும் ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி உதவிக்கான உத்தரவாதங்களும் மிகவும் முக்கியமானவை. எங்களது மீள்தன்மைக்கு இந்த ஆதரவு வலுச் சேர்க்கிறது,” என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
ரஷ்ய பொருளாதாரப் பேச்சாளர் கிரில் டிமிட்ரியேவ், ’சட்டவிரோதமாக’ ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாததை சமூக ஊடகத்தில் வரவேற்றார்.
சட்டமும் பொது அறிவும் வெற்றிபெற்றுள்ளது என்று அவர் கருத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஏறத்தாழ S$302.7 பில்லியன் (€200 பில்லியன்) மதிப்புள்ள ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தி உக்ரேனுக்கு உதவும் வாய்ப்பு மாநாட்டில் இருந்தபோதும் உறுப்பு நாடுகள் அதனைத் தவிர்த்துள்ளன.
முடக்கப்பட்ட நிதிகள் பெரும்பாலும் பெல்ஜியத்தில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வகுக்கப்பட்ட திட்டத்தைப் பெல்ஜியம் மாநாட்டில் எதிர்த்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவற்றை பகிர்ந்து பயன்படுத்த உத்தரவாதத்தைத் தரவேண்டும் என்று பெல்ஜியம் கேட்டுக்கொண்டதை ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன.

