பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசிலுள்ள இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தில் புகுந்து, 600,000 யூரோ (S$906,000) மதிப்புள்ள தங்க மாதிரிகளைக் கொள்ளையர்கள் களவாடிச் சென்றனர்.
டைனசோர் எலும்புக்கூடுகளுக்கும் விலங்குப் பொம்மைகளுக்கும் பெயர்பெற்ற தேசிய இயற்கை வரலாற்று அரும்பொருளத்தில் நிகழ்ந்த அத்திருட்டு செப்டம்பர் 6ஆம் தேதி காலையில் தெரியவந்தது.
கொள்ளையர்கள் கருவிகளின் துணைகொண்டு அக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகச் சொல்லப்படுகிறது.
களவு போனவற்றில் ‘நேட்டிவ் கோல்டு’ எனப்படும் உலோகக் கலவையாலான மாதிரிகள் பலவும் அடங்கும் என்று அரும்பொருளகத்தின் ஊடக அலுவலகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்தது.
அவை விலைமதிப்பிட இயலாத மரபுடைமை முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அது குறிப்பிட்டது.
‘நேட்டிவ் கோல்டு’ என்பது தூய்மைப்படுத்தப்படாத நிலையிலுள்ள தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன ஓர் உலோக் கலவையாகும்.
கொள்ளைச் சம்பவத்தையடுத்து, அந்த அரும்பொருளகத்தின் நிலவியல், கனிமவியல் காட்சியகங்கள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன.
இவ்வாண்டு ஜூலை மாதம் அரும்பொருளகத்தின் எச்சரிக்கை மணியும் கண்காணிப்புக் கட்டமைப்புகளும் வேலைசெய்யவில்லை என்று பெயர்கூற விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மைக் கொள்ளைச் செயலின்போதும் அவை வேலை செய்தனவா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், “நிபுணத்துவமிக்க குழுவின், கருவிகளின் துணையுடன் இக்கொள்ளை குறித்து ஆராய்ந்து வருகிறோம்,” என்று அரும்பொருளக இயக்குநர் இம்மானுவல் ஸ்கோலியோஸ் ‘பிஎம்எஃப்’ தொலைக்காட்சி ஒளிவழியிடம் கூறினார்.