பாரிஸ்: ‘பிஎஸ்ஜி’ என்ற ‘பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்’ காற்பந்து அணி ‘சாம்பியன்ஸ் லீக்’ இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை (மே 30) வீதிகளில் திரண்டபோது வன்முறை வெடித்தது.
இதனையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 280க்கும் மேற்பட்டோரைக் காவல்துறை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர் .இதுபோலவே கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் ‘பிஎஸ்ஜி’ பெற்ற வெற்றியின்போதும் வன்முறைச் சம்பவம் ஏற்பட்டது.
இம்முறைப் பாதுகாப்புக்காகப் பாரிசில் 8,000 பேர் உட்பட பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 22,000 காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். இடையூறுகளைக் குறைக்கும் நோக்கில், பாரிஸ் ‘டிராம்’ சேவைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் ரயில் நிலையங்கள் பல மூடப்பட்டன. சில இடங்களில் பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
பாரிசில் பிடிபட்ட 283 பேர் உட்பட நாடு முழுவதும் 416 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் உள்துறை அமைச்சு கூறியது.
வன்முறைச் சம்பவங்களில் அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகத் தெரிவித்த உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ், இந்த வன்முறை முற்றிலும் ஏற்கத் தகாதது என்று கூறினார். ஆறு வாகனங்களும் இரண்டு வர்த்தக நிறுவனங்களும் சேதமடைந்தன.
ரசிகர் குழு ஒன்று தீப்பந்தங்களை வீசியதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் நடந்த பரபரப்பான பெனால்டி ஆட்டத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிய வேளையில், பாரிசின் புகழ்பெற்ற ‘சாம்ப்ஸ்-எலிசீஸ்’ அவென்யூவில் கிட்டத்தட்ட 20,000 பேர் திரண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டு ‘சாம்ப்ஸ்-எலிசீஸ்’ உள்ளிட்ட வீதிகளில் இளையர்கள் கடைகளைத் தாக்கியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தவிர்ப்பதற்காகப் போட்டிக்கு முன்னதாகவே கடைகளின் சன்னல்கள் பலகைகளால் அடைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
24 தீப்பந்தங்களும் கிட்டத்தட்ட 100 பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேவேளையில், பேருந்து நிறுத்தத்தின் கூரை ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது.
பாடகி அயா நக்காமுராவின் இசை நிகழ்ச்சி, ராப் பாடகர் டாம்சோவின் நிகழ்ச்சி, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த பரபரப்பான மாலை வேளையில்தான் ‘சாம்பியன்ஸ் லீக்’ காற்பந்து இறுதிப் போட்டியும் நடந்தது.

