கலவரமாக மாறிய பிஎஸ்ஜி வெற்றிக் கொண்டாட்டம்

2 mins read
0f9b55b6-21fb-4324-8195-c8cd37e3d352
கொண்டாட்டத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோரைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். - படம்: இபிஏ

பாரிஸ் - பிரான்ஸில் நடைபெற்ற பாரிஸ் செயிண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) வெற்றியாளர் லீக் இறுதிப் போட்டியின் வெற்றியைக் காற்பந்து ரசிகர்கள் கொண்டாடியதை அடுத்து இருவர் மாண்டனர்; நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மியூனிக்கில் நடைபெற்ற காற்பந்தாட்டப் போட்டியில் இன்டர் மிலான் அணியை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி வென்றதை அடுத்து பாரிசில் ஆர்ப்பாட்டங்களும் கொண்டாட்டங்களும் உச்சத்துக்குச் சென்றன.

சேம்ப்ஸ் - எலிசீஸ் அவென்யூவில் கூடிய கூட்டத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கைகலப்பு மூண்டதை அடுத்து 491 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. பாரிஸ் உள்பட பிரான்ஸ் முழுவதிலும் மொத்தம் 559 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொண்டாட்டங்கள் நடைபெற்ற சமயத்தில் இரண்டு மரணங்களும் நேர்ந்தன.

சேம்ப்ஸ் - எலிசீஸ் பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் கார் ஒன்று மோதி மோட்டார் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த ஓட்டுநர் மாண்டார்.

தென்மேற்கு நகரான டேக்ஸில், வெற்றிக் கொண்டாட்டக் கூட்டத்திலிருந்த 17 வயது இளையர் கத்தியால் குத்தப்பட்டதில் மாண்டார்.

காற்பந்தாட்டம் முடிந்த சிறிது நேரத்தில் கொண்டாட்டத்தின்போது இளையரின் மரணம் நேர்ந்தது என்ற அதிகாரிகள் சம்பவத்துக்கும் காற்பந்தாட்டத்துக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது தெரியவில்லை என்றனர். தாக்குதல் நடத்திய நபரும் தப்பியோடிவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

- படம்: இபிஏ

பாரிஸில் 18 காவல்துறை அதிகாரிகளும் பிரான்ஸில் இதர பகுதிகளில் மூன்று அதிகாரிகளும் காயமுற்றதாக உள்துறை அமைச்சு சொன்னது. கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 192 பேருக்கும் காயம் ஏற்பட்டது. ஏழு தீயணைப்பு வீரர்களும் காயமுற்றனர்.

இரவு முழுவதும் நீடித்த கொண்டாட்டத்தில் 692 தீச் சம்பவங்கள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. அவற்றுள் 264 கார்களுக்குத் தீ மூட்டப்பட்டது.

பிஎஸ்ஜி அணி இன்று (ஜூன் 1) ‌சேம்ப்ஸ் - எலிசீஸ் பகுதியில் வெற்றி உலாவை நடத்தவிருந்தது. நாடு திரும்பும் காற்பந்தாட்ட வீரர்களைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாகக் கூடிய கூட்டத்தைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதிகாரிகள் கலைத்தனர்.

“கலகக்காரர்கள் கைகலப்பைத் தூண்ட முயன்றனர். காவல்துறை அதிகாரிகள்மீது அவர்கள் வாணவேடிக்கைகளையும் இதர பொருள்களையும் வீசினர்,” என்று காவல்துறை சொன்னது.

கலகத்தில் ஈடுபட்டோர் காவல்துறை அதிகாரிகள்மீது பொருள்களை வீசினர்.
கலகத்தில் ஈடுபட்டோர் காவல்துறை அதிகாரிகள்மீது பொருள்களை வீசினர். - படம்: இபிஏ

தென்கிழக்கு பிரான்ஸின் கிரெனோபல் பகுதியில் பிஎஸ்ஜி அணியின் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர் கூட்டத்துக்குள் கார் ஒன்று புகுந்ததில் நால்வர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தானாக முன்வந்து சரணடைந்த ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

- படம்: இபிஏ
குறிப்புச் சொற்கள்