தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய விளையாட்டு மோகம்: குடும்பத்தினரைக் கொன்ற இளையருக்கு 100 ஆண்டுகள் சிறை

2 mins read
4c1e8930-a761-4534-a898-8ebd609f4e15
தன் தாயார், சகோதரர், இரு சகோதரிகள் என நால்வரைச் சுட்டுக்கொன்றதை அந்த இளையர் ஒப்புக்கொண்டார். - மாதிரிப்படம்: இணையம்

லாகூர்: ‘பப்ஜி’ இணைய விளையாட்டுத் தொடர்பான பிரச்சினையால் ஆத்திரத்தில் தன் தாயார், சகோதரர், இரு சகோதரிகள் என நால்வரைச் சுட்டுக்கொன்ற பதின்ம வயது இளையருக்குப் பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 24) நூறாண்டுச் சிறைத்தண்டனை விதித்தது.

இந்தக் கொடூரச் சம்பவம் 2022ஆம் ஆண்டு அரங்கேறியது.

இப்போது 17 வயதாகும் ஸைன் அலி என்ற அவ்விளையருக்கு 4,000,000 பாகிஸ்தானிய ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்த இளையரின் வயதைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் 25 ஆண்டுகள் என மொத்தம் நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

லாகூரில் மக்கள் நெருக்கம் மிகுந்த கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஸைன் அலிக்கு அப்போது வயது 14. பப்ஜி விளையாட்டு வெறியரான அவர், தமது அறையில் இருந்தபடி நாளின் பெரும்பாலான நேரத்தை அவ்விளையாட்டிலேயே செலவிட்டார்.

இதனால், நேரத்தை வீணடிப்பதாகக் கூறி ஸைனின் தாயார் நகித் முபாரக் அவரை அடிக்கடி கண்டித்தார்.

விளையாட்டில் தனக்கு வகுக்கப்பட்ட இலக்கை அடிக்கடி எட்ட முடியாமல் போனதால் ஸைன் மூர்க்கத்துடன் நடக்கத் தொடங்கினார்.

சம்பவ நாளன்று, “பல மணி நேரம் விளையாடியும் இலக்கை எட்ட முடியாததால் ஸைன் தன்னுணர்வை இழந்தவர்போல் காணப்பட்டார். போதாக்குறைக்கு தன் தாயிடமிருந்தும் திட்டு வாங்கினார்,” என்று நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து, தன் தாயாரின் கைத்துப்பாக்கியை எடுத்த ஸைன், உறங்கிக்கொண்டிருந்த அவரையும் தன் இரு சகோதரிகளையும் சுட்டுக்கொன்றார்.

“தாயார் நகித் முபாரக், 45, அண்ணன் தைமூர், 20, சகோதரிகள் மஹ்னூர், 15, ஜன்னத், 10, என நால்வரை அவர் சுட்டுக்கொன்றார்,” என்று காவல்துறை தெரிவித்தது.

அவர்களைக் கொன்றதை ஸைனும் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்