பொதுமக்கள் அதிருப்திக் குரல்; சொகுசு காரைத் திருப்பிக் கொடுத்த இந்தோனீசிய ஆளுநர்

பொதுமக்கள் அதிருப்திக் குரல்; சொகுசு காரைத் திருப்பிக் கொடுத்த இந்தோனீசிய ஆளுநர்

2 mins read
2b1a862d-87be-432e-aca5-6d7f0bbb654e
கிழக்கு கலிமந்தான் மாநிலத்தின் ஆளுநர் ரூடி மசூது. - படம்: இன்ஸ்டகிராம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு கலிமந்தான் மாநிலத்தின் ஆளுநர் ரூடி மசூது, தாம் புதிதாக வாங்கிய 8.5 பில்லியன் ரூப்பியா (S$642,000) மதிப்பிலான அதிகாரபூர்வ வாகனத்தைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளார். காருக்காக அளவுக்கு அதிகமாக அவர் செலவு செய்தது குறித்து பொதுமக்களிடமிருந்து எழுந்த அதிருப்திக் குரல் இதற்குக் காரணம்.

கொள்முதல் தொடர்பாகப் பல நாள்களாக சர்ச்சை, விவாதங்கள் நீடித்தன.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று (மார்ச் 2) தமது அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் இந்த முடிவை திரு ரூடி அறிவித்தார்.

“கிழக்கு கலிமந்தான் மக்களின் விருப்பங்களையும் ஆக்கபூர்வமான கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிந்த பிறகு, இந்தக் காரைத் திருப்பித் தர நான் முடிவு செய்துள்ளேன். மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் தைரியம் கொண்டதே ஒரு சிறந்த அரசாங்கம்,” என்று திரு ரூடி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்முதல் தொடர்பான சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரிய திரு ரூடி, பொதுமக்களின் கருத்துகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

“ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வலுவான மற்றும் வெற்றிகரமான கிழக்கு கலிமந்தானை உருவாக்குவதற்கான உந்துதலாக அமையும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த சொகுசு வாகனத்தைத் திருப்பி அளிப்பதால் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் பொதுச் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று திரு ரூடி தெரிவித்தார். அரசாங்கப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறும் என்றும் மக்களின் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை வகுப்பதில் தமது நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்