பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் மற்றும் அவரது பூம்ஜாய் தாய் கட்சிக்கு மக்களிடையே இருந்த ஆதரவு பேரளவில் குறைந்துள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையால் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்குதலும் ஆட்சி நிலைத்தன்மையை அச்சுறுத்தக்கூடிய நீதிமன்றத் தீர்ப்பும் பிரதமர் அனுட்டினுக்குப் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன.
தேசிய மேம்பாட்டு நிர்வாக நிறுவனம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள 2,500 பேரிடம் தொலைபேசி வழியே நடத்திய ஆய்வின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) வெளியிடப்பட்டன.
ஜூன் மாதக் கருத்துக் கணிப்பில் பிரதமராக அனுட்டினுக்கு 21.7 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், செப்டம்பரில் அது 13.8 விழுக்காடாகச் சரிந்துள்ளது.
அதே காலகட்டத்தில் பூம்ஜாய் தாய் கட்சிக்கு இருக்கும் ஆதரவும் 17 விழுக்காட்டிலிருந்து 12.1 விழுக்காடாகக் குறைந்தது. இதன் காரணமாக அக்கட்சி, எதிர்க்கட்சியான மக்கள் கட்சிக்கும் கூட்டணிக் கட்சியான ஃபியூ தாய்க்கும் அடுத்தபடியாக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மூண்ட மோதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டிள்ளது. இது தாய்லாந்தின் குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி, விரைவான பணவீக்கத்துக்கும் குறைந்த பொருளியல் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் வாழ்க்கைச் செலவின உதவித் திட்டங்களைத் தாய்லாந்து அரசாங்கம் நீட்டித்துள்ளது.
மறுபுறம், பிரதமர் அனுட்டின் தலைமையிலான அரசாங்கத்துக்கு மிக முக்கிய அரசியல் சோதனையாக திங்கட்கிழமை (செப்டம்பர் 28) அமையவுள்ளது. பூம்ஜாய் தாய் கட்சியைக் அதிகாரத்துக்குக் கொண்டுவந்த பிப்ரவரி மாதப் பொதுத் தேர்தலின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அரசியலமைப்பு நீதிமன்றம் வழங்கவுள்ளது.
வாக்குச்சீட்டுகளில் அச்சிடப்பட்ட குறியீடுகள் வாக்கெடுப்பின் ரகசியத் தன்மையைப் பாதித்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் இத்தேர்தலைச் செல்லாது என அறிவித்தால், தாய்லாந்தில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகலாம்.
