பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பத்தாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் கடப்பிதழ் ஜூலை 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து புதுப்பிப்புப் பணிகள் சுமுகமாக இருந்தன என்று மலேசியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்ச செல்லுபடி காலம் ஐந்தாண்டிலிருந்து பத்தாண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுக் கடப்பிதழ் வேண்டுவோர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கிளானா ஜெயா, யுடிசி சிலாங்கூர் போன்ற இடங்களில் உள்ள குடிநுழைவு அலுவலகங்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில குடிநுழைவுக் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் முஹம்மது குசைரி கமருதின் கூறினார். விண்ணப்பம் செய்யும் இடங்கள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் ஏழு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு நாடு முழுவதும் 71 கடப்பிதழ் அலுவலகங்களில் புதிய பத்தாண்டு கடப்பிதழ் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று இதற்கு முன்னர் கூறப்பட்டது.
தொடக்கமாக, 14 அலுவலகங்களில் புதிய கடப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பத்தாண்டுக் கடப்பிதழை பிரதமர் அன்வார் இப்ராகிம் கடந்த புதன்கிழமை (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.
அது நடப்புக்கு வந்த இரண்டாம் நாளில் குடிநுழைவு அலுவலகங்களுக்கு வந்தோரிடம் ஊடகங்கள் கருத்து கேட்டன.
ஏடலின் சீ, 63, என்பவர் காலை 7.30 மணிக்கு வந்ததாகவும் ஒரு மணி நேரத்தில் புதிய பத்தாண்டுக் கடப்பிதழைப் பெற்றதாகவும் கூறினார். பத்தாண்டுக்குப் புதுப்பிக்க 175 ரிங்கிட் (S$55) செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே செல்லுபடியாகும் கடப்பிதழ் உள்ளவர்கள் அவசரமாக மாற்ற வேண்டியதில்லை என்றும் அது காலாவதியாக ஆறு மாதங்களுக்குக் குறைவான காலம் இருந்தால் புதுப்பிக்கும்போது பத்தாண்டுக் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுக் கடப்பிதழைப் பெற 350 ரிங்கிட், ஐந்தாண்டு கடப்பிதழுக்கு 200 ரிங்கிட் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

