பெக்கன்பாரு/மேடான்: காட்டுத்தீயும் நிலப்பகுதிகளில் எரியும் நெருப்பும் இணைந்து இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான புகைமூட்டத்தால் பல விமானச் சேவைகள் மாற்று வழிகளுக்குத் திசை திருப்பிவிடப்பட்டன. பல சேவைகள் தாமதமடைந்துள்ளன.
கடந்த சில நாள்களில் காற்றுத் தரம் மிக மோசமான அளவை அடைந்துள்ளதோடு, புகைமூட்டத்தின் கடுமையால் யாராலும் எதையும் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
பாலெம்பாங்கில் இயங்கும் சுல்தான் மஹ்முட் படருதீன் II அனைத்துலக விமான நிலையத்தை வியாழக்கிழமை (அக்டோபர் 8) காலை சென்றடைய வேண்டிய ஐந்து விமானச் சேவைகள் புகைமூட்டத்தால் அங்குத் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனை அவ்விமான நிலையப் பொது மேலாளர் அகமது சியாவ்கி சஹாப் உறுதிப்படுத்தினார்.
தலைநகர் ஜகார்த்தா, பங்கா பெலிதுங் தீவுகளைச் சேர்ந்த பங்கல்பினாங்கு ஆகிய இடங்களுக்குச் செல்லவேண்டிய மூன்று விமானச் சேவைகளும் யோக்யகார்த்தா, ஜகார்த்தா ஆகிய நகரங்களில் இருந்து சென்றுசேர வேண்டிய விமானச் சேவைகளும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டன.
புகைமூட்டத்தால் விமான நிலையத்தில் எதையும் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
“அதன் வழக்கமான செயல்பாட்டுக்கான அடிப்படை அளவான 600மீட்டர் தூரத்தையும்விடப் பார்க்கும் தொலைவு வெகுவாகக் குறைந்துவிட்டது. விமானச் சிப்பந்திகள், பயணிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யப் பல விமானப் புறப்பாடுகளையும், தரையிறங்க வேண்டிய விமானங்களையும் நாங்கள் தாமதப்படுத்த வேண்டியிருந்தது,” எனவும் திரு அகமது இந்தோனீசிய ஊடகத்திடம் விளக்கமளித்தார்.
அதே விமான நிலையத்தில் அக்டோபர் 3ஆம் தேதி 18 விமானச் சேவைகள் தாமதமாயின. புகைமூட்டத்தால் தெளிவாகப் பார்க்க முடியாததால் அவ்வாறு ஏற்பட்டது. பாத்தாம், ரியாவ் தீவுகளிலும் விமானச் சேவைகள் கடந்த சில நாள்களில் தாமதம் ஆகின.
