ஈப்போ: மலேசியாவில் பொது இடங்களில் குப்பை வீசுவோர்க்குத் தண்டனை விதிப்பதற்கானப் புதிய சட்டம் புத்தாண்டுமுதல் அமலுக்கு வந்தது.
அதன்படி அக்குற்றத்தைப் புரிவோர்க்கு அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் வரை அபராதமும் ஆறு மாதங்களில் மொத்தம் 12 மணி நேரம் மிகாமல் சமூகச் சேவை செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலைகளைச் சுத்தம் செய்வது, வடிகால், பொது கழிவறைகளைச் சுத்தம் செய்வது ஆகியவற்றுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டும் பணியும் தண்டனையாக வழங்கப்படலாம் என மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சர் இங் கோர் மிங் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) கூறினார்.
வெளிநாட்டவர்களுக்கும் சிறார்களுக்கும் அத்தண்டனை பொருந்தும் எனக் கூறிய அவர், சுத்தம் என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு, அது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல என்றார்.
ஈப்போவில் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் மேற்கூறியவாறு தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பொது இடங்களில் குப்பை வீசிய குற்றத்திற்காக 42 பேருக்குக் குறிப்பாணை வழங்கப்பட்டது என்றும் அவர்களில் 24 பேர் மலேசியர்கள், இரு பிள்ளைகள் உட்பட 18 பேர் வெளிநாட்டினர் என்றும் அமைச்சர் இங் குறிப்பிட்டார்.

