பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா இருவரும் பிப்ரவரி மாதம் பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளதாக தினமணி ஊடகம் புதன்கிழமை (ஜனவரி 14) செய்தி வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் இலக்கோடு முதல்வரோடு, தொழில்துறை அமைச்சரும் மேலும் சில மாநில அரசாங்க அதிகாரிகளும் வெளிநாட்டுப் பயணத்தில் உடன் செல்லவிருந்தனர்.
ஆனால் காரணங்களின்றி, மத்திய அரசு அவர்கள் அனைவருக்கும் அனுமதி மறுத்துவிட்டதாக ஆம் ஆத்மி பொதுச் செயலாளரும் கட்சியின் ஊடகப் பொறுப்பாளருமான பல்டேஜ் பன்னு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வருக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படுவது இது முதல்முறையல்ல.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அப்போது இந்தியாவின் ஹாக்கி அணிக்கு ஆதரவாக பிரான்ஸ் செல்ல திரு பகவந்த் திட்டமிட்டபோதும் அவருக்கு மத்திய அரசின் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தியாவின் மூத்த தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் முன்பாக அவர்கள் மத்திய வெளியுறவு அமைச்சிடம் அனுமதி பெறுவது அவசியமாகும். அதன்படி அவர்கள் பயண விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாநில முதல்வர் என்ற முறையில் திரு பகவந்துக்குத் தூதரக கடவுச் சீட்டு உள்ளது. இருப்பினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பஞ்சாப் அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

