மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார்.
இதற்கு, அந்நாட்டின் பொருளியல் திட்டங்களை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
புதன்கிழமை மாஸ்கோவில் நடைபெற்ற ‘விடிபி’ முதலீட்டுக் கருத்தரங்கில் பேசிய திரு புட்டின், இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ரஷ்யாவின் இறக்குமதி மாற்றுத் திட்டத்துடன் ஒப்பிட்டார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் தயாரிப்புத் தொழிற்சாலைகள் அமைக்க விரும்புவதாகவும் கூறிய திரு புட்டின், இந்தியாவின் தலைமைத்துவம் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் சொன்னார்.
“பிரதமர் மோடியும் ‘மேக் இன் இந்தியா’ என்று அழைக்கப்படும் ஒத்த திட்டத்தை வைத்துள்ளார். நாங்கள் ஏற்கெனவே தயாரிப்பு வசதிகளை இந்தியாவில் வைத்துள்ளோம். இந்தியப் பிரதமர் மோடியும் இந்திய அரசாங்கமும் நிலையான சூழலை உருவாக்கி வருகின்றன. இந்தியாவின் தலைமைத்துவம் இதனை முதல் கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதால் லாபம் கிடைக்கும் என்று நம்புகிறோம்,” என்று புட்டின் குறிப்பிட்டார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் கட்டமைப்புக்குள் ரஷ்யாவின் இறக்குமதி மாற்றுத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி திரு புட்டின் மேலும் பேசினார்.
வெற்றிகரமான ரஷ்யாவின் புதிய தயாரிப்புகள் மேற்கு நாடுகளின் தயாரிப்புகளுக்கு மாற்றாக இருக்கின்றன. இந்தப் புரட்சி பயனீட்டாளர் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் தொடர்கிறது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
புட்டின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் வலியுறுத்தினார்.