மாஸ்கோ: ரஷ்யாவில் குறிப்பிட்ட அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொண்டுள்ளார்.
கிரெம்ளின் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வெளியிட்ட நேர்காணலில் அவரின் கருத்து இடம்பெற்றுள்ளது. ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்த பிறகு, அந்நாடும் தொடர்ந்து எதிர்த்தாக்குதல்களை நான்கு ஆண்டுகளாக நடத்திவருகிறது.
உக்ரேன், அதன் மக்கள் மீதும் எரிசக்திக் கட்டமைப்புகள் மீதும் கிட்டத்தட்ட அன்றாடம் ரஷ்யா தாக்குதல்களைத் தொடுத்துவந்ததால், பதிலடி நியாயமானதுதான் என்று கூறியது.
எரிசக்தி உட்பட முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களால் பிரச்சினைகள் உண்டாகும் என்பது நன்றாகத் தெரியும் என்றார் ரஷ்ய அதிபர்.
“இப்போதைய நிலையில் குறிப்பிட்ட அளவு பற்றாக்குறையை நாங்கள் எதிர்நோக்குகிறோம், ஆனால் அது ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை,” என்று திரு புட்டின் கூறினார்.
ரஷ்யாவின் விமான எதிர்ப்புத் தற்காப்பு ஆற்றலை மேம்படுத்துவதுதான் இப்போதுள்ள முக்கியப் பணி என்று அவர் சொன்னார். முக்கியமாகக் கிரைமியாவுக்கு எரிபொருள் விநியோகம் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் திரு புட்டின்.

