தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

24 ஆண்டுகளில் முதன்முறையாக வடகொரியாவுக்கு புட்டின் பயணம்

1 mins read
c274bbc5-94d9-4c77-ad70-5e47adcca34c
வடகொரியத் தலைநகர் பியோங்யாங் வந்திறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் நடந்து செல்கிறார். - படம்: ஏஎஃப்பி

சோல்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், 24 ஆண்டுகளில் முதன்முறையாக வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவும் வடகொரியாவும் மற்ற நாடுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள வேளையில், திரு புட்டினின் இந்தப் பயணம் இருநாட்டு உறவுகளுக்கு மறுவடிவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் புதன்கிழமை (ஜூ 19) வந்திறங்கிய திரு புட்டினை, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அரவணைத்தார்.

திரு புட்டினின் விமானத்துக்குப் பக்கத்தில் இருவரும் கைகுலுக்கிக்கொண்டு பேசிய பிறகு, திரு புட்டின் தங்கவுள்ள கும்சுசான் அரசாங்க விருந்தினர் மாளிக்கைக்கு ஒரே லிமோசின் காரில் அவர்கள் சென்றனர்.

திரு புட்டினின் இந்தப் பயணம், இரு தலைவர்களின் நட்பு மற்றும் ஒற்றுமையின் வெல்லமுடியாத தன்மையையும் நீடித்த தன்மையையும் வெளிக்காட்டுவதாக வடகொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்தது.

வடகொரியா ரஷ்யா உறவுகள் “அனைத்துலக நீதி, அமைதி, பாதுகாப்பைக் காப்பதற்கான ஒரு வலுவான உத்திபூர்வ கோட்டையாக உருவெடுத்துள்ளது,” என்று கேசிஎன்ஏ கூறியது.

இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை, இசை நிகழ்ச்சி, அரசாங்க விருந்து உபசரிப்பு, மரியாதைக் காவல் அணியைப் பார்வையிடும் சடங்கு, ஆவணங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் புதன்கிழமை (ஜூன் 19) நடைபெறவிருப்பதாக திரு புட்டினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் கூறியதை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.

குறிப்புச் சொற்கள்