உக்ரேன் அமைதி உடன்பாடு குறித்து அமெரிக்கத் தூதர்களுடன் புட்டின் பேச்சு

2 mins read
e8fdbc32-7bf0-48a5-9e29-1e33ca6eb44b
ரஷ்ய அதிபர் புட்டின் மாஸ்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதன்கிழமை (ஜனவரி 21), காணொளிவழி பேச்சு நடத்தினார். - படம்: இபிஏ
multi-img1 of 2

மாஸ்கோ: உக்ரேன் அமைதித்திட்டம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் வியாழக்கிழமை (ஜனவரி 22) விவாதிக்கவுள்ளார்.

ரஷ்யா - உக்ரேன் போர் நிறுத்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டு விட்டது என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை அடுத்து இப்பேச்சு இடம்பெறுகிறது.

அமெரிக்கா ரஷ்யா, உக்ரேன், ஐரோப்பிய தலைவர்களுடன் தனித்தனியாக உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பல்வேறு திட்டங்களின் பல்வேறு வரைவுகள் குறித்து அமெரிக்கா பேச்சு நடத்தியுள்ளது. எனினும், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் பலமுறை உறுதியளித்த போதிலும் எந்த ஒப்பந்தமும் இதுவரை எட்டப்படவில்லை.

ரஷ்ய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் புதன்கிழமை (ஜனவரி 21) பேசிய புட்டின், டிரம்பின் சிறப்பு தூதர் விட்கோஃப், டிரம்பின் மருமகன் குஷ்னரை மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாகக் கூறினார். உக்ரேன் தீர்வு குறித்து தொடர்ந்து பேசுவதுடன், டிரம்பின் அமைதி வாரிய யோசனை, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்தும் பேசப்போவதாக அவர் சொன்னார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகக் கொடூரமான போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது, உக்ரேனின் எதிர்காலம், ஐரோப்பிய சக்திகள் எந்த அளவிற்கு ஓரங்கட்டப்படுகின்றன, அமெரிக்கா முன்னெடுக்கும் அமைதி ஒப்பந்தம் நீடிக்குமா என்பதெல்லாம் கேள்வியாகவே உள்ளன.

கிழக்கு உக்ரேனில் தொடர்ந்து எட்டு ஆண்டு சண்டைக்குப் பிறகு 2022 பிப்ரவரியில் ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்தது. இது பனிப்போருக்குப் பிறகு மாஸ்கோவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய மோதலைத் தூண்டியது.

அமைதிப் பேச்சுக்குத் தயராக இருப்பதாக திரும்பத் திரும்ப கூறும் புட்டின், மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளில் போரை ஒரு திருப்புமுனைத் தருணமாகக் கருதுகிறார்.

1991ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்தபின்னர், நேட்டோவை விரிவுபடுத்தியதன் மூலமும், மாஸ்கோவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தியதன் மூலமும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அவமானப்படுத்தியதாக அவர் கூறி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்