புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆண்டிறுதிக்குள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மாஸ்கோ சென்றுள்ள இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை மேற்கோள்காட்டி அந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் திரு அஜித் தோவல் அங்குச் சென்றுள்ளார்.
“ரஷ்யாவுடன் சிறந்த உறவு நிலவுகிறது. நெடுங்காலம் நீடிக்கும் அந்த உறவை நாங்கள் மதிக்கின்றோம். உயர்நிலைப் பேச்சில் ஈடுபட்டுள்ளோம். அவை கணிசமான பலனைத் தந்துள்ளன. இந்தியாவுக்குத் திரு புட்டின் வருவது குறித்து உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருக்கின்றோம்,” என்று அவர் சொன்னார்.
ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள வர்த்தக உறவினால் அமெரிக்கா சினமடைந்திருக்கிறது. இவ்வேளையில் திரு புட்டினின் பயணம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குகிறது. அதனால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களும் தேசியப் பாதுகாப்பு நலன்களும் சிக்கலுக்கு உள்ளாகியிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அறிவித்தார்.
இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதற்குள்ளாகவே ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளதாக புளூம்பெர்க் கூறுகிறது.
இந்நிலையில் வரும் நாள்களில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் சந்திக்கவிருப்பதாகவும் கிரெம்ளின் தெரிவித்திருக்கிறது. சந்திப்பு நடைபெறவிருக்கும் இடம் குறித்து இரு தரப்பும் விவாதிப்பதாக ரஷ்ய அதிபரின் வெளியுறவு விவகார ஆலோசகர் யுரி உஷாகோவ் கூறினார். சந்திப்பு பற்றிய மேல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

