விண்கல இயந்திரங்களை உற்பத்தி செய்ய ரஷ்ய விண்வெளித்துறையிடம் புட்டின் வலியுறுத்தல்

2 mins read
9410badf-7dc9-47dd-a7b1-20595bb515b0
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். - படம்: பெரித்தா ஹரியான்

மாஸ்கோ: விண்கல இயந்திரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கும்படி ரஷ்ய விண்வெளித்துறையிடம் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.

விண்வெளித் தொழில்நுட்பத்தில் சிறந்தோங்கும் நாடு என ரஷ்யாவுக்கு இருக்கும் நற்பெயரை கட்டிக்காத்து மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

அதிபர் புட்டின் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக்கிற்கும் ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள நகரமான சமாராவுக்கும் அவர் சென்றார்.

சமராவில் ரஷ்ய விண்வெளித்துறை நிபுணர்களை அதிபர் புட்டின் சந்தித்துப் பேசினார்.

பிறகு அங்குள்ள விமான இயந்திர உற்பத்தி ஆலையை அவர் பார்வையிட்டார்.

விண்கல இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஆற்றலை அடிக்கடி புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியம் என அதிபர் புட்டின் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.

ரஷ்யாவின் தற்போதைய தேவைகள் மட்டுமின்றி, எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உலகச் சந்தைகளில் வெற்றிகரமான போட்டியாளர்களாக ரஷ்ய விண்வெளித்துறை இருக்க வேண்டும் என்றும் அதிபர் புட்டின் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

உக்ரேன் மீது படை எடுத்ததால் ரஷ்ய எரிசக்தித் துறைக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்தும் அது புத்தாக்கத்துடன் மேம்பட்டு வருவதை அதிபர் புட்டின் சுட்டினார்.

ரஷ்ய எரிவாயு ஏற்றுமதியின் மேம்பாடு மிகவும் முக்கியமானது என்றார் அவர்.

சீனாவுக்கு எரிவாயு அனுப்பும் குழாய் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இக்குழாய் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பலன் அளிக்கக்கூடியது என்று அதிபர் புட்டின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்