புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பரிந்துரைக்கு ஏற்ப புத்ரா ஜெயாவில் உள்ள சிறுவர்களிடையே மொழி ஆற்றலை வலுப்படுத்துவதற்கு மலேசிய அரசாங்கம் ஒரு முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.
இம்முயற்சியின் வழி குறிப்பாக வார இறுதி நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு மிகவும் நடைமுறையான, நிதானமான மொழி கற்றல் தளத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் அலுவலக அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
“பிள்ளைகள் மூன்று மொழிகளைச் சரளமாகப் பேச வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் அல்லது அரபு ஆகியவற்றில் மூன்று அவை. ஆனால், இந்த மொழிகளுக்குப் பயிற்சி தேவை. பயிற்சி செய்ய முடியாவிட்டால், வெறும் ஏட்டில் கற்பதால் மட்டும் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. எனவே புத்ரா ஜெயாவில் வளரும் சிறுவர்களுக்கு வார இறுதி நடவடிக்கை இடங்களை அதிகமாக உருவாக்க விரும்புகிறோம்,’’ என்றார் ஹன்னா இயோ.
வீட்டிலோ அல்லது சமூகத்திலோ மொழியைப் பயிற்சி செய்ய இடம் இல்லாததால் சிறுவர்கள் தன்னம்பிக்கையை இழந்து அன்றாட வாழ்க்கையில் மொழியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் குறைவதாக திருமதி ஹன்னா வருத்தம் தெரிவித்தார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவது இன்னும் கலந்துரையாடல் அளவிலேயே உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதை விரிவுபடுத்துவதற்கு முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் ஒரு முன்னோடித் திட்டமாகவும் இது தொடங்கப்படும் என்று கூறினார்.

