சிட்னி: கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகளுக்கு உரிய தொகையைப் பயணிகளுக்குத் திருப்பித் தரத் தவறியதாகக் கூறி, குவான்டாஸ் விமான நிறுவனத்தின்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடுகளுடன்கூடிய விமானப் பயண மதிப்புப் புள்ளிகளை வழங்காமல், வாடிக்கையாளர்களின் இழப்பைப் பொருட்படுத்தாது, அவ்விமான நிறுவனமே வட்டியில்லா நிதியின்மூலம் தன்னை வளப்படுத்திக்கொண்டது என்று ‘எக்கோ லா’ எனும் சட்ட நிறுவனம் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதுகுறித்து, குவான்டாஸ் நிறுவனத்திற்குத் திங்கட்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகுப் பயணக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், புதிய பயணச்சீட்டு வாங்க, தங்களுக்கு வழங்கப்பட்ட பயண மதிப்புப் புள்ளிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக ‘எக்கோ லா’ நிறுவனப் பங்காளி ஆண்ட்ரூ பால் தெரிவித்தார்.
தங்களது பற்றுச்சீட்டுகளைக் கொடுத்து அதற்கான மதிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிடில், மதிப்புப் புள்ளிகள் அனைத்தையும் இழக்கக்கூடும் என்று பயணிகளை குவான்டாஸ் கட்டாயப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனையடுத்து, எஞ்சிய மதிப்புப் புள்ளிகளுக்கான தொகையைத் திருப்பித் தருமாறும் இத்தனை ஆண்டுகாலம் காக்க வைத்தமைக்குப் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
கொவிட்-19 சார்ந்த பயண மதிப்புப் புள்ளிகள் மூலம் குவான்டாஸ் ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$1.74 பில்லியன்) திரட்டியதாகக் கூறப்பட்டது.
கடந்த ஜூலை மாதம், எஞ்சிய $400 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள பயண மதிப்புப் புள்ளிகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பயணிகளை அது ஊக்குவித்தது.

