சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய விமான நிறுவனமான குவான்டாஸ் வாடிக்கையாளர்களின் அசௌகரியங்களைக் குறைக்க முன்னதாகத் திட்டமிட்டதைக் காட்டிலும் அதிகம் செலவுசெய்யும் என்று கூறியிருக்கிறது.
இருப்பினும், அதிகரித்துவரும் எரிபொருள் விலையினால் விமானப் பயணக் கட்டணம் உயரக்கூடும் என்று அது எச்சரித்தது.
புதிய தலைமை நிர்வாகியான வேனசா ஹட்சனின்கீழ் இயங்கும் குவான்டாஸ், சேவை தொடர்பில் வந்துள்ள புகார்களைக் கடுமையாக எடுத்துக்கொள்வதாக வாடிக்கையாளர்களுக்கு மறுஉறுதிப்படுத்தியுள்ளது.
அதே வேளையில், செலவுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பைத் தன்னால் சமாளிக்க முடியும் என்று முதலீட்டாளர்களிடமும் அது கூறிவருகிறது.
கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்திற்குப் பிறகு, அதன் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாலும் பயணப் பெட்டிகள் காணாமல்போனதாக வந்த புகார்களாலும் குவான்டாஸின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விமானச் சேவைகளுக்கான கட்டணம் திருப்பித் தரப்படவில்லை என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் குவான்டாஸ்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 150 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் மேல், இப்போது வாடிக்கையாளர்களின் மேம்பாட்டுக்காகக் கூடுதலாக 80 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரைச் செலவிடப்போவதாக குவான்டாஸ் கூறியுள்ளது.