டோஹா: போயிங் நிறுவனத்திடமிருந்து 210 விமானங்களை வாங்க கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வியாழக்கிழமை (மே 14) ஒப்பந்தம் செய்துள்ளது. அரபு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிகாரத்துவ பயணம் சென்றுள்ள வேளையில் உடன்பாடு செய்யப்பட்டது.
ஜிஇ ஏரோஸ்பேஸ் (GE Aerospace) நிறுவனத்தின் பொறிகள் கொண்ட போயிங் நிறுவனத்தின் 787 ரக விமானங்களின் மதிப்பு ஏறக்குறைய $96 பில்லியன் டாலர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
787 ரகத்தில் 130 விமானங்கள், 777X ரகத்தில் 30 விமானங்கள் என மொத்தம் 160 விமானங்களுக்கான முன்பதிவு செய்துகொள்ளப்பட்டது என்று போயிங் நிறுவனம் கூறியது.
அதையடுத்து நியூயார்ர்கில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் 0.6 விழுக்காடும் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.7 விழுக்காடும் உயர்ந்தன.
787 ரக விமானங்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் டிரென்ட் 1000 பொறிகளுக்குப் பதிலாக ஜிஇ ஏரோஸ்பேஸ் பொறிகளைத் தெரிவுசெய்ததாகக் கத்தார் குறிப்பிட்டது.
ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 400 பொறிகளைப் பெற உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை செய்யப்பட்ட முன்பதிவுகளில் இதுவே ஆகப் பெரியது என்று நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி லேரி கல்ப் கூறினார்.
777X ரக விமானங்கள் உருவாக்கப்படுகின்றன என்றும் 2026ஆம் ஆண்டுக்குள் விநியோகம் செய்யப்படும் என்றும் போயிங் குறிப்பிட்டது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கெனவே 94, 777X ரக விமானங்களை வாங்க பதிவுசெய்துள்ளது. அதன் போட்டி நிறுவனமான எமிரேட்ஸ் 777X ரகத்தில் 205 விமானங்களை வாங்குகிறது.