கோலாலம்பூர் பேருந்து முனையத்தில் நெரிசலைத் தவிர்க்க ‘கியூஆர்’ குறியீடு

கோலாலம்பூர் பேருந்து முனையத்தில் நெரிசலைத் தவிர்க்க ‘கியூஆர்’ குறியீடு

2 mins read
35107a82-4eb7-422b-8db8-6da1f8c61dfd
கியூஆர் குறியீடு இருந்தால் பேருந்து புறப்படும் வாயிலுக்கு நேரடியாகச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க ‘கியூஆர்’ குறியீட்டு முறை கொண்டுவரப்பட உள்ளது.

இதனை மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) தெரிவித்தார்.

இந்த மாதத்திலேயே குறியீட்டு முறை அறிமுகம் காணும் என்று கூறிய அவர், பயணச் சீட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அந்தக் குறியீடு பயணத்தை சுலபமாக்கும் என்றார்.

மின்னிலக்க முறைக்கு மாறுவதால் பயணிகள் பயணச்சீட்டு எடுத்துச் செல்லத் தேவை இல்லை. பயணச்சீட்டை வாங்கும்போது அனுப்பப்படும் கியூஆர் குறியீட்டை கைப்பேசியில் எடுத்துச் சென்றால் போதும். அவர்கள் பேருந்துகள் புறப்படும் வாயிலுக்கே நேரடியாகச் சென்றுவிடலாம்.

பேருந்துப் பயணத்தில் கூட்ட நெரிசலைக் குறைக்க, குறிப்பாக உச்சநேரத்தில் ஏற்படும் சிரமங்களைத் தணிக்க இந்தப் புதிய முறை நடப்புக்குக் கொண்டுவரப்படுவதாக திரு லோக் தெரிவித்தார்.

கோலாலம்பூரின் டிபிஎஸ் பேருந்து முனையத்தில் புறப்பாட்டு வாயிலுக்குச் செல்வதற்கு முன், பயணச்சீட்டை அது வழங்கப்படும் முகப்பில் வாங்கவேண்டும்.

ஆனால், அதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குத் தீர்வுகாணும் வகையில் குறியீட்டு முறை கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“இனிமேல் வாங்கப்படும் பயணச்சீட்டுடன் கியூஆர் குறியீடு சேர்க்கப்படும். இதற்கு முன்னர் இணையத்தில் பயணச்சீட்டு வாங்கியோர், கியூஆர் குறியீட்டை அந்தச் சீட்டுடன் சேர்க்க பேருந்து நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முகப்புக்குச் செல்ல வேண்டும். அல்லது 1 ரிங்கிட் (S$0.30) கட்டணம் செலுத்தி இணையம் வாயிலாகக் குறியீட்டை பயணச்சீட்டுடன் சேர்க்கலாம்,” என்று திரு லோக் தெரிவித்தார்.

புதிய பயணச்சீட்டு அனைத்திலும் கியூஆர் குறியீட்டைச் சேர்ப்பது கட்டாயம் என பயணச் சீட்டு முகவர்களிடம் நிலப் பொதுப் போக்குவரத்து வாரியம் (Apad) தெரிவித்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மாற்றம் பற்றி தெரியாமல் பேருந்து முனையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ அங்கு பணியாளர்கள் இருப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சீனப் புத்தாண்டு காலத்தில் டிபிஎஸ் பேருந்து நிலையத்திற்கு தினமும் 30,000 முதல் 40,000 வரையிலான பயணிகள் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

அது பற்றிக் கூறிய திரு லோக், “சீனப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாள் காலங்களில் தினமும் கிட்டத்தட்ட 1,000 பேருந்துப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்